மூவேந்தர்கள் தவிர்த்து பதிணெண் வேளிர்களும் சிறிது சிறிதாய் அந்தந்த பகுதிகளில் ஆளுமை செலுத்தியுள்ளனர். மூவேந்தர்களுக்கு முந்தைய குடித்தலைவர்கள் அவர்களே. சங்க இலக்கியத்தில் இவர்களை குறித்து பாடல்கள் அதிகம் பாடப்பட்டுள்ளது. மூவேந்தர்களின் ஆளுமைக்குபிறகு, அவர்களின் தலைமையையேற்று தங்களின் இருப்பை நீட்டித்துள்ளனர். அவர்களின் வரலாற்றினை முழுமையாய் காண்போம். முதலில் தகடூரை ஆண்ட அதியர் மரபினரை குறித்து காண்போம்.
இலக்கியத்தில் அதியமான்கள் :
அதிகர்,அதியன், அதிகன், அதியமான், அதியர்கோமான், அதிகமான், நெடுமான்அஞ்சி, அதியர்கோமான் அஞ்சி, நெடுமான், பல்வேல் அஞ்சி என பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர். புறநானூற்றில் அதியமான்கள் குறித்து( 87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,101,102,103,104,106,206,208,231,232,236,315,390) பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் அதிகம் பாடப்பெற்றது இம்மரபே!
அதியமான் குறித்து பாடிய புலவர்கள்:
1.ஔவையார்
2.பரணர்
3.மாமூலனார்
4.பெருஞ்சித்திரணார்
5.காப்பியாற்று காப்பியனார்
6.அரிசில் கிழார்
7.நக்கீரர்
8.தாயங்கணார்
9.இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
10.அஞ்சியத்தை மகள் நாகையார்
காலத்தால் முந்தைய அதியமானாய் கருதப்படுவது பசும்பூன் பாண்டியனுக்காய் போரிட்டு அவனுக்காய் தன் உயிரை மாய்த்த அகநானூறு குறிப்பிடும் அதிகனையே முதல் அதியமானாய் அறிஞர் கருதுகின்றனர். இதற்கடுத்து கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை ஔவ்வைக்கு அளித்து அழியாபுகழ் பெற்ற அதியமான் ஆவார். அவரின் மகன் "பொகுட்டெழினி" மூன்றாமவர். அசோகரது கல்வெட்டிலேயே அதியமான்கள் குறித்து குறிப்பு வருகிறது எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைபெற்ற குடியினராய் அதியர் மரபை கொள்ளலாம். கி.மு.5 ம் நூற்றாண்டினை சேர்ந்தவராய் அதியர் மரபை சான்றுகளோடு ஏற்கலாம்.
அதியர் நடுகல்:
முதன்முதலாய் கரும்பினை அறிமுகம் செய்தவர்கள் அதியமான்கள். அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கீழே உள்ளவாறு பாடுகிறார்
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ (புறம் 232)
என்றும்
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே
என்றும் பாடுகிறார்.
மேலும் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இவன் போரிட்டு நடைபெற்ற போரில் வேல்பாய்ந்து இறந்தான். இறந்தவன் உடல் தீயில் இடப்பட்டது இதனை,
எறிபுனக் குறவன் குறைய லன்ன
கரிபுற விறகின் ஈம ஓள்ளழற்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே (புறம் 235)
என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய தர்மபுரி பகுதியே அன்றைய தகடூர் நாடு. புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்! எங்கு ஒளிந்துள்ளதோ? இக்காலகட்டத்தைச் சேர்ந்த புலிமான்கோம்பை நடுகற்கள் கிடைத்துள்ளது! நிச்சயம் இந்நடுகல்லும் ஓர்நாள் வெளிவரும். அக்கால வழக்கப்படி அதியருக்கு நிச்சயம் பெரிதாக உயர்பதுக்கை ஏற்ப்படுத்தி வழிபாட்டில் வைத்திருப்பர். இன்று எங்கு வணங்கப்படுகிறதோ அதியர் கோமானின் நடுகல்?
கல்வெட்டில் அதியமான்கள்:
அசோகர் கல்வெட்டில் அதியமான்கள்:
அசோகர் கிர்நார் கல்வெட்டு
ஐம்பை (கி. பி - 1) ஸதியபதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்தபளி
கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராய் கருதப்படும் அசோகர் தனது, சபாஸ், கால்சி, கிர்னார், ஜௌகதா ஆகிய் இடங்களில் வெட்டிய கல்வெட்டுகளில் தனது எல்லைக்கு அப்பாற்பட்ட அரசுகளாய், சோடா(சோழ), பாண்டிய, சதியபுதோ, கேதலபுதோ(சேரர்) என தென்புலத்து அரசமரபுகளை கூறுகிறார். இதில் வரும் சத்தியபுத்திரர்(சதியபுதோ) யார் என நீண்டகாலமாய் விவாதத்திற்குள் இருந்தது. கோசர்,என்றும் கொச்சிக்கு மேல்உள்ள நிலப்பரப்பு என்றும் சத்தியவரதஷேத்ரம்(காஞ்சிபுரம்) என்ற கருத்தும் இருந்தது. அதன்பின் ஜம்பையில் கண்டறியப்பட்ட "ஸதியபுதொ அதியமான் நெடுமான் அஞ்சி" எனும் கல்வெட்டு மேற்கண்ட ஐயங்களை நீக்கி, சத்தியபுத்திரர் அதியமான்களே என்று உறுதிபட சான்றளித்தது.
திருக்கோவிலூரில் நடந்த போர் ஒன்றில், தன் நண்பனான ஓரியை கொன்ற மலையமான் திருமுடிக்காரியை அதியமான் வென்றதாய் சங்க பாடல் கூறுகிறது. அப்போரில் அவன் வென்றதால் மலையமான் ஆண்ட திருக்கோவிலூரும் அவன் வசமாகியது. எனவே திருக்கோவிலூர் மாவட்டமான ஜம்பையில் அதியரது கல்வெட்டு வெட்டப்பட்டது.
கி.பி.5 முதல் 8 வரை:
அதன்பின் தமிழக அரசியலில் ஏற்ப்பட்ட மாற்றம் காரணமாய் அதியர்களது குறிப்புகள் சுமார் 300 ஆண்டுகள் வரலாற்றில் கிடைக்கவில்லை. அதன்பின் பல்லவன் சிம்மவிஷ்ணு கால தர்மபுரி நடுகல் ஒன்றில்
"புறமலைநாட்டு மொக்கப்பாடியான்
தொறு கொள காப்புறை ஆளும்
மைந்தன் குமாரச்சதியாரு
பட்டார் கல்"
என வருகிறது. இதில்வரும் குமாரச்சதியாரை, அதியர் என அறிஞர் கருதுகின்றனர். அதன்பின் தர்மபுரி மகேந்திரவர்மனின் நடுகல் கல்வெட்டு ஒன்று, (கி.பி.604)
"கடிகாவில் அஞ்சினாரு மக்கள்"
என பயின்று வருகிறது. இதில் வரும் "அஞ்சினாரு" என்பதனை அதியமானான் மரபில் வந்த ஓர் வீரனாக கருதப்படுகிறது!
சேலம் மாவட்டம் ஒட்டபாடியில் கிடைத்த கங்கமன்னன் ஸ்ரீபுருஷனின் நடுகல் கல்வெட்டில்(கி.பி 782)
"தெழினியாரின் சேவகன் எருமைய நக்கனார் எருவாயிலை எறிந்து பட்டான்" என வருகிறது. இதில் வரும் "தெழினியார்" என்பது எழினியின் வழியினராய் கருதப்படுகிறது!
அதே காலகட்டத்தில் அதியமான்களால், "அதியேந்திர விஷ்ணு க்ருஹம்" எனும் குடைவரைக்கோவில் அதியர்களால் நாமக்கல்லில் கட்டப்படுகிறது. இக்குடைவரை வளாகத்தில் பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழி பாடல் கல்வெட்டுகளும்,ஒன்பது விருதுப்பெயர்களும் காணப்படுகிறது!
இக்கல்வெட்டு வாயிலாய் இக்குடைவரையின் பெயர் "அதியேந்த்ர விஷ்ணு க்ருஹம்" என்பதும், இதனை உருவாக்கியவர் அதியர் மரபைச் சேர்ந்த "குணசீலர்" என்பதும் தெரிய முடிகிறது,
விருதுப் பெயர்கள்:
1.உத்பலகர்ணிகன்
2.நரவாகனன்
3.நரதேவன்
4.மதனவிலாசன்
5.பிரகிருதிபிரியன்
6.உதாரசித்தன்
7.மானசாரன்
8.நயபரன்
9.விமலசரிதன்
பிற்காலத்திய வடமொழி தாக்கம் காரணமாய் இவ்விருதுபெயர்களை வடமொழியில் "அதியன் குணசீலன்" ஏற்றிருப்பதை அறியலாம். இதில் அதியமான் சந்திரகுலத்தைச் சேர்ந்தஅதிராஜன் ஒருவரின் மகள்வயிற்றுப் பேரன் என தன்னை அழைத்துக்கொள்கிறான். இக்குடைவரை கி.பி 8 ம் நூற்றாண்டாய் கணிக்கப்பட்டுள்ளது. சீவரமங்கல செப்பேட்டில் முதலாம் வரகுணன் அதியமானை வென்று மதுரைச் சிறையில் அதிகமானை சிறையில் அடைத்ததாய் கூறுகிறான்.இதன் பின் அதியர் மரபு சோழர்களின் பெருவளர்ச்சி காரணமாய் அப்பெரும் பேரரசில் கலந்தது. ஆயினும் ஆங்காங்கே சில அதியர்கள் தம் இருப்பை கல்வெட்டில் வெட்டியுள்ளனர். சோழப்பெருவேந்தன் காலத்தில் கங்கநாடு சோழரின் கீழ் வருகையில், குவளாபுரம்(கோலார்) பகுதியையும், அருகேயுள்ள தகடூர் பகுதியையும் இணைத்து "நிகரிழி சோழமண்டலம்" என ஒரே வளநாடாக்கினார். அதன்பின் முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே ஒரு அதியமான் தென்படுகிறார். ராஜராஜன் காலசோழப்பேரசில் பல வேளிர் மரபினர் தனியே ஆதிக்கம் செலுத்தாது, தானைத்தலைவர், தளபதி நிலையிலேயே காணப்படுகின்றனர். ஒட்டக்கூத்தரின் விக்ரமசோழன் உலாவில், கூறப்பட்ட கலிங்கத்துப்பரணியில், கலிங்கப்போரில் அதியமான் ஒருவன் கலந்துகொண்டதை பற்றி கூறுகிறது.
"ஒட்டிய மானஅரசர் இரிய வடகலிங்கத்
தானை துணித்த அதிகனும்"
என்ற வரிகளில் இதனை காணலாம். மேலும் குலோத்துங்கனின் ஸ்ரீரங்கம் கல்வெட்டில், "பொன்பற்றிஉடையானான அரையன் சேனன் ஆன இராஜேந்திரசோழ அதியமான்" இதில் வரும் பொன்பற்றி எனும் ஊர் திருவீழிமிழலையாகும். தகடூரை பூர்விகமாய் கொண்ட அதியரில் ஒருபிரிவினர் மெல்ல இடம்பெயர்ந்து சோழமண்டலத்தில் வந்ததை இதன்மூலம் அறியலாம். இராஜராஜ அதியமான், எனும் ஒருவர் 12 ம் நூற்றாண்டில் வருகிறார்.
விடுகாதழகிய பெருமாள்:
"ராஜராஜ அதிகமான்", "பிறந்த பெருமாள்", "ஆண்டார் அதிகமானார்" என கல்வெட்டில் மரியாதையாய் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இடம்பெறுகிறார். மேலும் அதிகேசன், அதிகேந்திரன், தகடையர்காவலன், தகடையர்மன்னன் என வெகுவாய் புகழப்பட்டு தனியாய் கல்வெட்டு வெட்டும் வண்ணம் ஆளுமையில் இருந்தவரே "விடுகாதழகிய பெருமாள்" இவர் திருமலை கல்வெட்டில்,
"சேரவம்சத்து அதிகைமான் எழினி"
"வஞ்சியர் குலபதி எழினி" என சேரர்குடியின் கிளையாய் அதிகமானை கூறுகிறார். இவரது சித்தூர் கல்வெட்டில், "சேரவம்சத்து அரசர் விடுகாதழகிய பெருமாள்" என குறிப்பிட்டு அங்கே விற்சின்னத்தினையும் பொறித்துள்ளார்.
இவர் தன்னை பாலி, பொன்னி, பெண்ணை ஆற்றுக்கு தலைவன் என கூறிக்கொள்கிறார். எனவே இம்மூன்று ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதியை இவர் ஆண்டிருக்க வேண்டும். தனக்கு பகைவராய் காடவர், கங்கர், மகதர், ஆகியோரைச் சுட்டுகிறார். இவர் பெயரில் "விடுகாதழீச்வரம்" எனும் கோவில் வாணியம்பாடியில் உள்ளது. சோழர் வலுகுன்றிய காலத்தில் சாமந்தர்களாய் விளங்கிய குறுநில அரசர்களான சம்புவரையர், அதியமான், வானகோவரையர் முதலியோர் கூட்டணி அமைக்க, இத்தகவலை அறிந்த சோழனின் உறவினரான ஹொய்சாளர்கள் தர்மபுரியில் அதிகமானை தாக்கி கொன்றனர். அதன்பின் அதிகமானின் வம்சம் மன்னராகும் தகுதி தடுக்கப்பட்டது.
1278,79 ல் வல்லம் சோழீஸ்வரர் கோவிலில் அதிகாரி ஒருவரின் பெயர் அதிகமான் என வருகிறது! இறுதியாக "திருவாசல் முதலி" எனும் குறுகிய பதவியில் குலசேர பாண்டியனின் கல்வெட்டில் ஒருவர் வருகிறார். அதன்பின் இவர்களைப்பற்றிய குறிப்புகள் வரலாற்றில் முடிந்தது.
இன்றும் தர்மபுரி பகுதியிலும், மதுரை, காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகமான்கள் எனும் பட்டப்பெயர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அதியமான் பெருவழி :
அதியமான் பெருவழி நாவற் தாவளத்திற்குக் காதம்-29
என்று எழுதப்பட்டுள்ளது. காதம்-29 என்ற எண்னுக்கு அருகில் இரண்டு பெரிய துவாரமும் ஓன்பது சிறிய துவாரமும் குழிகளாக செதுக்கப்பட்டுள்ளன.
பெரிய துவாரமும் ஒவ்வோன்றும் பத்துகாதமாகும் மீதி ஓன்பது சிறிய துவாரமும்
ஒவ்வோன்றும் ஓரு பத்துகாதமாகும் . நாவற் தாவளம் என்ற ஊர் எங்கு இருந்தது
என்பது இதுவரை கண்டுபிடிக்க வில்லை.இதன் காலம் 13 ஆம் நூறாண்டாக இருக்கும் கருதப்படுகிறது.இது இராசராச அதியமானின் காலத்தை சார்ந்தாக இருக்கவேண்டும்.
Reference :
1.பல்லவர், பாண்டியர், அதியர் குடைவரைகள்.
2.South indian inscriptions
3.நடுகல் கல்வெட்டுகள்
4.தமிழகத்தில் அதியர் மரபு
5.கல்வெட்டும் வாழ்வியலும்
Nice info
ReplyDelete