Monday, 3 August 2020

முத்தரையர்

தமிழக சிற்றரசர்கள்-04
முத்தரையர்:

முத்தரையர் மரபு பற்றி இதுவரை வெளிவந்த அறிஞர்களின் கூற்று:

1.களப்பிரர் வழிவந்தவர்
2.புல்லி மரபினர்
3.வேளிரான கங்கர் வழிவந்தவர்

இதுவரை முத்தரையர் குறித்த பொதுவான புரிதல் இது.

இம்மூன்று வாதங்களையும் அலசுவோம்

1.களப்பிரர் வழிவந்தவர்:

அடுதிறல் ஒருவ நிற்பரவதும் எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
கயலோடு கிடந்த சிலையுடைக் கொடுவரி
புயலுலற் தடக்கை போர்வேல் அச்சுதன்

இப்பாடல் "வியைவினிச்சயம்" எனும் நூலில் ஆசாரிய புத்ததத்தேதர் எனும் அறிஞரால் கி.பி 5 ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதில் மூவேந்தரின் சின்னங்களை அச்சுதன் எனும் களப்பிரன் தன் கொடியில் கொண்டிருந்தான் எனப்பாடுகிறார். (கயல்(மீன்),சிலை(வில்),கொடுவரி(புலி))

இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் எனும் முத்தரைகளை ஆண்டதனால், இவர்கள் பிற்காலத்தில் "முத்தரையர்" என அழைக்கப்பட்டனர். செந்தலை தூண்கல்வெட்டில் "ஸ்ரீ கள்வர் கள்வன்" என வருகிறது! இதனை களவர களவன் என்று கொள்ளலாம் அதாவது களப்பிரர் என கொள்ளலாம் எனும்
இக்கருத்தினை மயிலை.சீனி வேங்கடசாமியும் மேலும் சில அறிஞர்களும் கருதினர். ஆனால் நடன.காசிநாதன் முதலியோர் இக்கருத்தினை மறுக்கின்றனர். களப்பிரர் தம் கல்வெட்டில் தம்மை முத்தரையர் என எங்கும் அழைக்கவில்லை. அதேபோல பாண்டியர் செப்பேட்டில் "கலிஅரசன்" என களப்பிரரை அழைக்கின்றனர்.ஆனால் குன்றாண்டார் கோவில் கல்வெட்டில் முத்தரையர் ஒருவர் தம்மை "கலிமூர்க்கன்" களப்பிரரை எதிர்த்தவன் எனும பொருளில் அழைத்துக்கொள்கிறான். இக்காரணங்களால் முத்தரையர் களப்பிரர் குடிஅல்ல என்கிறார்.

2.புல்லி மரபினர்:

புல்லியார் வம்ச நடுகல்:

"கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"

அகநானூற்று பாடலான இப்பாடலில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும், வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான்(அரசன்) என பொருள் கொள்ளலாம். 

புல்லியின் வாழ்க்கைமுறை:

"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" 

தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை,கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, தன்னை புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான்.கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.

இதுதவிர புல்லியியின் இனத்தை பற்றி 10 பாடல்கள் சங்கஇலக்கியமெங்கும் கிடைக்கிறது. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக்கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில் கூடகண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில் வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக்கூட்டங்களை கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது என காட்டியிருப்பார். தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் "கரந்தைபோரில்" மட்டுமே ஈடுபட்ட இவ்வினம். நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்ப்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்ககாலத்தில் எவ்வரசக்கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலை கொண்டிருந்த இவ்வினம், கிட்டத்தட்ட சங்ககாலம் தொடங்கி ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அவ்வாறே தனித்தவொரு குடியினராய் திகழ்ந்ததற்கு கீழ்க்கண்ட புல்லிநடுகல்லே சான்று. இந்த கள்வர் குலத்திலிருந்து கிளைத்த குடியாய் முத்தரையர் இனம் உருமாற்றமடைந்திருக்கூடும் என்ற ஐயத்தினை செந்தலை, மற்றும் கிள்ளுக்கோட்டை நடுகல் உணர்த்துகிறது. இரண்டாம்நந்திவர்மன் காலத்திலேதான் முத்தரையர் கல்வெட்டு அரசமரபினராய் தஞ்சைபகுதியில் கிடைக்கிறது. அதற்குமுன் தொண்டைமண்டல பகுதி நடுகல்லில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டாம் நந்திவர்மனின் கடிநகரம் இன்றைய கண்டியூரைசுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதியில் அவருக்கு ஆதரவான ஒரு குடி முத்தரையர் மட்டுமே! பன்னிரன்டு வயதில் அரியனையேறிய நந்திவர்மன் தாயாதி பிரச்சனையில் கடிநகரம் தோற்றுவித்து அங்கேகுடியேற, அவருக்கு ஆதரவாய் தொண்டைமண்டலத்திலிருந்து தஞ்சைப்பகுதிக்கு முத்தரையர் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். சித்திரமாய பல்லவராஜனும், பாண்டியனும் நந்திவர்மனை சிறைபடுத்த, திருத்தணியிலிருந்து பெரும்டையொடு உதயேந்திரன் வந்து அவர்களை வென்று நந்திவர்மனை மீட்டான். அப்போரில் முத்தரையரின் பங்கு பெரியதாய் இருந்திருக்கும். இப்போருக்கு பிறகே குவாவன் முத்தரையன் எனும் முத்தரைய மன்னனின் முதல் கல்வெட்டு பொன்விளைந்தபட்டி அருகே கிடைக்கிறது. இதன்பிறகே முத்தரையர் மரபு அரச உருவாக்கம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. அதன்பின் நிருபதுங்கன் காலம் வரை பல்லவருக்கு கீழிருந்து சிறப்பாய் ஆட்சிபுரிந்தனர். இவர்களில் சிறந்த மன்னனாய் கருதப்படும் சுவரன்மாறன் தன் கல்வெட்டுகளில் "கள்வர் கள்வன்" என கூறிக்கொள்கிறான். எனவே சங்ககாலத்தில் தன்னை "கள்வர் கோமான்" என கூறிக்கொள்ளும் புல்லி மரபு இவர்களாய் இருக்கக்கூடும் என நடனகாசிநாதன் முதலானோர் கூறுகின்றனர்.

கீழே கானும் நடுகல் கல்வெட்டு, ஆநிரைகவரும் குடியாய் இருந்த புல்லிகள் அதன்பின் காவல்காக்கும் குடியாய் மாறி நிரைமீட்டு இறந்த வெட்சிபோர் வீரனை பற்றி கூறுகிறது.

"புல்லியார் கொற்றாடை நிரை
மீட்டுப்பட்ட கல் கோனாரு"

என்பது மேற்கண்ட கல்வெட்டு வாசகம்

3.கங்கர் வழிவந்தவர்:

முத்தரசர் என்ற சொல்லினை முதன்முதலாக பெங்களூர், கோலார்,தலைக்காடு பகுதிகளில் ஆண்ட கங்கர்களின் செப்பேட்டிலே காண்கிறோம். இவர்கள் கொங்கனி கங்கர் என அழைக்கபடுகின்றனர்.

பொயு 550-600 ன் இடைப்பகுதியில் ஆண்ட துர்விநீதன் என்பவர், முதல்பகுதியை சமஸ்கிருதத்திலும் மறுபகுதியை பழைய கன்னடத்திலும் (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழிலேதான் இருக்கும்) கொண்ட இருமொழிச் செப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செப்பேட்டின் சமஸ்கிருத பகுதியில் அவர் தன்னை "ஸ்ரீமத் கொங்கனி விருத்தராஜேன துர்விநீத நாமதேயன்" எனவும், அதே பகுதியை பழைய கன்னடத்தில் "ஸ்ரீ கொங்கனி முத்தரசரு" எனவும் குறிப்பிடுகிறார். பொயு 7ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம்சிவமாறன் என்ற கங்க மன்னனும் இவ்வாறே முத்தரசர் என்று தன்னை அழைக்கிறார்.

சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் வேளிர்களில் கங்கரும் உள்ளனர். அகநானூறில் உள்ள ஒரு பாடலில் "நன்னன் ஏற்றை நறும்பூண் அந்தி துன்னரும் கடுந்திறள் கங்கர் கட்டி"(அகம்.44 ) என சிறப்பித்துக் குறிப்பிடபடுகின்றனர். இதில் குறிப்பிடப்படும் நன்னன் என்ற கங்கர், சோழன் ஒருவரோடு போரிட்டு தோற்றுள்ளார், சங்ககால கங்கர் கொங்கானத்தை ஆண்டு படிப்படியாக பெங்களூர், கோலார் வரை அரசை நிறுவினர். இந்த தரவுகளை வைத்து கங்கரே முத்தரையர் என குடவாயில் பாலசுப்ரமணியம் முதலானோர் கருதுகின்றனர்.

முத்தரையர் வம்சாவளியினராக,

1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்

2.அவர் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்

3.அவர் மகன் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன்

என மூன்று தலைமுறை முத்தரைய மன்னர்களைச் செந்தலை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

முத்தரையர்களின் அரசானது பல்லவர் காலத்தில் துவங்கி பின் பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆதரவில் வளர்ந்து பிற்காலசோழ பேரரசின் தலையெடுப்பில் முடிவுற்றது. இவர்களின் அரசானது தஞ்சை மேற்குபகுதியிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையிலும், காவிரி வடகரையிலிருந்து புதுக்கோட்டையின் ஒரு பகுதி வரையிலும் நீண்டிருந்தது. முத்தரையரின் கல்வெட்டுகள் நேரடியாக செந்தலை, திருசென்னம்பூண்டி, திருசோற்றுத்துறை, மலையடிப்பட்டி நார்த்தாமலையிலும், பின்னர் அவர்கள் வேளிர்களுடன் கொண்ட திருமணமுறை குறித்து குடுமியான்மலை போன்ற சில இடங்களிலும், அதிகாரிகள், படைவீரர்கள் போன்ற நிலையை எய்தியமைக்கு சான்றாக சோழதேசத்தில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

தகவல்கள்:

1.Epigraphia indica vol 13(page 142) 
2.Pudukottai state inscriptions

3.குடவாயில் பாலசுப்ரமணியம் (நந்திபுரம்,தஞ்சாவூர்)


மேற்க்கண்ட மூன்று கருத்துகளும் இன்றுவரை விவாதத்திற்குள்ளாகவே உள்ளது. இதில் மேலுள்ள களப்பிரர் முத்தரையரே எனும் கருத்து சரியானதாய் இருக்க வாய்ப்பு குறைவு.

சங்கம் மருவிய காலம் என சொல்லப்படும் அதாவது கி.பி 3 ற்கு பின் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூலான நாலடியாரில் முத்தரையர் பற்றி முதன்முதலாய் ஒரு பாடல் வருகிறது.

"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்"

நடுகற்களில் முத்தரைசர்:

வானகோமுத்தரைசர்:

செங்கம் மேற்கோவலூரில் வானகோமுத்தரைசர் எனும் நரசிம்மவர்ம பல்லவன்(கி.பி-630-669)கால நடுகல் கிடைத்துள்ளது. கல்வெட்டில் நேரடியாய் கிடைக்கும் முதல் முத்தரையர் நடுகல் இது.

பெரும்பாண முத்தரைசர்:
தருமபுரி பாலவாடி, பெரும்பாண முத்தரைசர் எனும் குறுநிலத்தலைவனின் நடுகல் கிடைத்துள்ளது. "பெரும்" எனும் அடைமொழி நாலடியார் பாடலில் முத்தரையர் குறித்து கூறுகையில் பயின்று வருகிறது. அதேபெயர் இங்கேயும் வருவது நோக்கத்தக்கது. இவர் ஸ்ரீபுருஷவர்மன் எனும்கங்க மன்னனிற்கு அடங்கி கங்கநாட்டின் சில பகுதிகளை ஆண்டது தெரிகிறது.

காடகமுத்தரையன்:

இந்த முத்தரையன் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் வருகிறான். சிறுவனான இரண்டாம் நந்திவவர்மன் சிறுவனாய் அரியனை ஏற்கிறான். அங்கு ஏற்கனவே இருந்த பல்லவாதிராஜன், இவனை எதிர்க்க அச்சமயம் இந்த காடகமுத்தரையனே பல்லவனுக்கு காவலனாய் நின்று மீண்டும் காஞ்சியை அவனுக்கு தலைநகராய்
மாற உதவிபுரிகிறான். இதற்கடுத்து குவாவன் என்பவரது பெயர் கிடைக்கிறது.

8-10 ம் நூற்றாண்டு முத்தரையர்:
தஞ்சை மாவட்டம் பொன்விளைந்தப்பட்டி குளத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. இது இரண்டாம் நந்திவர்மன் கால கல்வெட்டாகும். இதில் குவாவனது மனைவி பள்ளிச்சந்தமாய் நிலதானம் அளிக்கிறார். இவருக்கு இரு மகன்கள் 
1.குவாவன் மாறன் 2.குவாவன் சாத்தன்

குவாவன் மாறன் தஞ்சை பகுதியிலும் குவாவன் சாத்தன் புதுக்கோட்டை பகுதியிலும் சமகாலத்தில் ஆள்கின்றனர்.

குவாவன்மாறன் மரபு:
இவனது மகன் மாறன் பரமேஸ்வரன் இவனது கல்வெட்டு கிடைக்காவிடினும், செந்தலை கல்வெட்டில் தன் முன்னோராக சுவரன்மாறன் கூறுகிறான். இவரது மகனே பெரும்புகழ் பெற்ற சுவரன்மாறன். இவன் மூன்றாம் நந்திவர்மனின் சமகாலத்தவன், 

ஆயிரத்தளி என குறிப்பிடப்படும் 'நந்திபுரம்', நியமம் என ஊரில் மட்டுமே இவ்வகை சிலைகள் உள்ளது. அன்றைய நந்திபுரம் இன்றைய கண்டியூர் வீரசிங்கம்பேட்டை மற்றும் அருகேயுள்ள ஊர்களால் ஒருங்கிணைந்த பெருநகரமாய் அன்று இருந்துள்ளது. இதனை குடவாயிலார் நந்திபுரம் என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.நியமம் கல்லனை -திருக்காட்டுப்பள்ளி இடையே சிற்றூராய் உள்ளது.

ஆயிரத்தளி வாகீசர்:

'ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி' என சிறப்பித்து கூறப்படும், நந்திவர்மபல்லவனால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரிலும், அவர்களின் சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் இவ்வகை வழிபாடு இருந்துள்ளது.ஆயிரம் லிங்கங்களை நிர்மாணித்து வணங்கும் வழக்கம் இவ்விரு ஊர்களில் இருந்துள்ளது. இன்றும் அவ்வூர்களை சுற்றி ஆங்காங்கு நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன.

இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும்.இறைவன் தாமரைபீடத்தில் சுகாசனகோலத்தில் அமர்ந்திருப்பார்.நான்கு தலைகளுடன் நாற்கரங்களுடன் கம்பீர கோலத்திலிருப்பார்.நான்கு முகங்களிலும் நெற்றிக்கண் இருக்கும்.
மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை 'தாமரைச்சைவனாக' காட்டுகிறார்.தேவாரம், திருவாசகத்திலும், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகமநூல்களிலும் வாகிசர் குறிக்கப்படுகிறார்.
இவ்வறிய சிற்பம் இன்று பிரம்மனாக கண்டியூரிலும், செந்தலையிலும் வணங்கப்படுகிறார்.

சுவரன்மாறன் வெற்றிகள்:

பெரும்பிடுகு முத்தரையன் எனும் சுவரன் மாறன் அவர்தம் பகைவர்களை மணலூர், கொடும்பாளூர், காரை, காந்தளூர், கண்ணணூர், செம்பொன்மாரி, மறங்கூர், அண்ணல்வாயில், அழிந்தியூர் ஆகிய ஊரில் வென்றதாய் புலவர்கள் பாடியுள்ளனர். செந்லையில் இக்கல்வெட்டு உள்ளது.
இதில் நிறைய இடங்கள் புதுக்கோட்டை சுற்றியே உள்ளன. 

பதிமூன்று பட்டங்களை இவன் சூடிக்கொள்கிறான்.இப்பட்டங்கள் இவனது நடுகல்லிலும் வருகிறது.

கிள்ளுக்கோட்டை நடுகல்:

கிள்ளுக்கோட்டையிலுள்ள ஓர் தனியார் வயலில் உள்ளது.
அதிலுள்ள கல்வெட்டு வாசகம்:

1.ஸ்ரீ ஸத்ரு கேசரி
2.ஸ்ரீஅபிமான தீரன்
3.ஸ்ரீ கள்வர் கள்வன் வாள்வரிவேங்கை கு...தி

சுவரன் மாறனின் முக்கிய பட்டங்கள் இதிலுள்ளது அதற்கடுத்து கடைசியாய் வாள்வரிவேங்கை கு...தி என்பதை குத்தியது என பொருள் கொள்ளலாம்.
இம்மாபெரும் வீரன் வாள்வரிவேங்கை எனும் வீரரால் கொல்லப்பட்டார் என கொள்ளலாம். இறந்த இடத்தில் நடுகல் எழுப்பும் வழக்கம் அன்று இருந்ததால் இவ்விடத்தில் நிகழ்ந்த ஓர் போரில் இறந்திருக்கலாம்.
இதன் கீழே ஓரு புலி உருவம் இருந்து பின்னர் சிதைக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து ஆண்ட சுவரன்மாறனின் வழியினர் விவரம் இல்லை. இம்மரபினரிடமிருந்தே விஜயாலயசோழன் தஞ்சையை கைப்பற்றியிருக்கிறார். அல்லது இவனுக்குபின் சாத்தன்மாறன் மரபு தஞ்சையும், புதுக்கோட்டையும் சேர்ந்து ஆண்டிருக்கக்கூடும்.

குவாவன்சாத்தன்:

குவாவன் சாத்தனுக்கு விடேல்விடுகு எனும் பெயர் உண்டு. இவன் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டியில் குடைவரையை ஏற்படுத்தினான். இவனது மகன் சாத்தம்பூதி இவனே நார்த்தாமலையில் புகழ்பெற்ற விஜயாலயசோழீஸ்வரம் கோவிலை எழுப்பியவன். மழையால் இடிந்த இக்கோவிலை தென்னவன் தமிழதரையன் புதுப்பிக்கிறான்.
சாத்தம்பூதிக்கு பூதிஅரிந்திகை எனும் மகள் உண்டு. குவாவன் சாத்தனின் மற்றொரு மகன் சாத்தம்பழியிலி இவனும் நார்த்தாமலையில் ஓர் குடைவரை கோவிலை எழுப்பி தன்பெயரிலேயே அழைக்கிறான். இவனின் தங்கை பழியிலி சிறியநங்கை. இவளின் தங்கை சாத்தங்காளி.

பூதிகளரி எனும் முத்தரையன் புதுக்கோட்டை பூவாலக்குடியில் ஓர் குடைவரை எழுப்புகிறான். இவன் சாத்தம்பூதி எனும் ஓர் கருத்துண்டு.

இவ்வாறு சிற்றரசர்களாய் இருந்த முத்தரையர் மரபு, பராந்தகர் காலத்தில் இருக்குவேளிருடன் மணமுடிக்கும் நிலையில் இருந்து படிப்படியாய் உயர்அதிகாரி, தளபதி எனும் நிலைமை எய்கிறது. இறுதியாய் காவல்காரனாய் சில செப்பேடுகள் கிடைத்து மக்களோடு மக்களாய் கலந்து விடுகின்றனர்
முத்தரைசர் நடுகல்

குவாவன் கல்வெட்டு



பூதிகளரி 

புல்லி நடுகல் 



Saturday, 1 August 2020

ஆய் மன்னர்கள்

தமிழக சிற்றரசர்கள்:3

ஆய் மன்னர்கள்:

 குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும் ஒருவரே என கருதுகிறார். அவர்கள்  வடநாட்டு யதுகுல சத்திரியர் (யாதவ) என்கிறார். அதனை பேராசிரியர் ஸ்ரீதரமேனன் மறுத்து இவர்களும் சேர,சோழ பாண்டியர் போன்று இந்நிலத்து மக்களே என்கிறார். 

      . “செங்கடலின் வழிக்காட்டி” (கிபி81-96) என்ற கடற்பயணக்குறிப்பு நூல் ஒரு கிரேக்க மாலுமியால் எழுதப்பட்டது. அது நெல்சிண்டாவிலிருந்து கன்னியாகுமரி வரையிலான இடங்களை பாண்டியர் ஆட்சி செய்ததாக தெரிவிக்கிறது. இவ்விடத்திற்குப் பெரிய கப்பல்களை அனுப்புகிறார்கள் எனெனில் இங்கு மிளகு, மாலபத்திரம் போன்றவை கிடைக்கும் அதற்கு பிறகு கொமாரி(குமரி) என்ற இடம் வருகிறது எனத் தெரிவிக்கிறது. கிரேக்கப் பயணி தாலமி ஆய்நாடு பெரிஸ்(பம்பாஆறு) முதல் கன்னியாகுமரிவரை பரவியிருந்தது பொட்டிகோ (பொதிகை மலை) இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். எனவே கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆய் நாடு பாண்டிய நாட்டுக்கும், சேர நாட்டிற்கும் இடையே இருந்ததாக கருதப்படுகிறது. இறையனார் அகப்பொருள் உரை 7ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கன்னியாகுமரிவரை ஆய் மன்னர்களின் எல்லை இருந்ததை தெரிவிக்கிறது. 

         ஆய்க்குடி இவர்களின் தலைநகர். நாகர்கோயில் அருகில் உள்ள இடலாக்குடி (இடராய்க்குடி) தலைநகராக இருந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர். தாலமி மற்றும் பிளினி தங்கள் குறிப்புகளில் கொட்டியாரா என்ற வணிக இடத்தைக் குறிப்பிடுகின்றனர். அது இன்றைய கோட்டார் என்கிறார் இலங்கை தமிழறிஞர் கனகசபை. பிற்கால ஆய் மன்னர் ஆட்சியில் திருவட்டாறும், விழிஞமும் மாறிமாறி அரசியல் தலைநகராக இருந்திருக்கின்றன. கோட்டாறு இரண்டாம் தலைநகராக இருந்திருக்கின்றது.

       சங்க கால ஆய் மன்னர்களாக நால்வர் பெயர் கிடைக்கின்றது. இதில் முதலாவதாய் வருபவர் ஆய் அண்டிரன், கடையேழு வள்ளல்களில் ஒருவர்.இவனது வள்ளல்தன்மை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் சங்கப் புலவரால் புறநானூற்றில் சிறப்பித்து பாடப்பெற்றுள்ளது.

''மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக உடைய இக் கவின்பெறு காடே..''
 இவன் அந்துவன் சேரல் காலத்தவன் 

 முகிலினங்கள் சென்று தங்கும் உயர்மலைக்குத் தலைவன், சுரப்புன்னை மலர்க் கண்ணியையும் தப்பாத வாளினையும் உடையவன். அத்தகைய ஆயின் மலையை எம்மையன்றிக் களிறு செறிந்த கவின் காடும் பாடினவோ! யானை மிகுதியாயிருந்த காட்டின் யானைகளையெல்லாம் பரிசிலர் பெற்றுப் போயினர். அதனால்தானோ என்னவோ யானைகள் வேண்டுமென இவ்வழகிய காடு நின்னைப் பாடியதோ? என்று ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பாடுகிறார் முடமோசியார் சங்கப்புலவர்களுக்கு குதிரை, தேர், யானை என பல பரிசுகள் வாரி வழங்கியவன், இவன் இறந்தபோது அவன் உரிமை மகளிர் அனைவரும் உடன்கட்டை ஏறினர், யானையை அரசச் சின்னமாகக் கொண்டவன் இவன்.

முதலாம் திதியன்:

புறநானுற்றில் பொதிகைச்செல்வன் என அழைக்கப்படுகிறார் இவர், சங்க கால அரசனும், புலவனுமான ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தவன், பூதப்பாண்டியன் இவன் காலத்தில் பூதப்பாண்டியை அவனது நாட்டின் மேற்கு எல்லையாக அமைத்துக்கொண்டன், இவருக்கு அதியன் என்ற ஒரோ பெயரும் உண்டு. அதியன்  நாட்டில் எப்போதும் மழைப்பெய்யும் என அகநானுறு குறிப்பிடுகிறது. குமரி மாவட்டம் தோவளை வட்டத்தில் உள்ள அழகியபாண்டிபுரம் ஊர் இவன் பெயரால் அதியனூரான அழகியபாண்டிபுரம் என 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் காலத்தைச் சார்ந்த பசும்பொன் பாண்டியன் என்ற அழகியபாண்டியனின் பெயரும் இவன் பெயரும் இணைந்து அழைக்கப்படுகிறது இவ்வூர்.

இரண்டாம் திதியன்:

சேரன், சோழன் என்ற முடியுடைய வேந்தர் இருவரும் திதியன், எழினி முதலிய ஐம்பெரும் வேளிரும் படையெடுத்து இளைஞனான நெடுஞ்செழியனை வெல்ல பெரும்படையுடன் வந்தனர். அவர்களை பெருவீரத்துடன் வென்றான் பாண்டியன். தமிழ்நாட்டையே தன் வசப்படுத்தினான். அப்போரில் கலந்துகொண்டு தோற்றவனே இரண்டாம் திதியன். இவன் காலத்தில் ஆய்நாட்டின் எல்லை குன்றியது.

எழினியாதன்:

சங்ககாலத்தில் எழினியாதன் என்பவன் ஆண்டிருக்கிறான் இவனும் ஆய் பரம்பரை என்கின்றனர் ஆய்வாளர்கள்.இவன் காலம் யானைக்கட்சேய் மாந்தரம்சேரல் இரும்பொறை, குட்டுவன் சேரன், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞசெழியன் ஆகியோரின் காலம் என்பர். இவனைப் புறநாநூறு (366) கூறும். இவன் சேரனுக்கு உதவியாக சோழனை எதிர்த்தவன் என்பர். இது போன்று நாஞ்சில் பொருநன் என்ற நாஞ்சில் வள்ளுவன் குறித்தும் சங்கப் பாக்களில் காணப்படுகிறது. இவர்கள் இருவரும் ஆய் மன்னனின் கீழ் குறுநில மன்னனாக இருந்திருக்கலாம்.             
சங்க காலத்திற்கு பின் எட்டாம் நூற்றாண்டு வரை ஆய் மன்னர்கள் எங்கும் பெயர்கள் காணப்படவில்லை. அதன்பின் கல்வெட்டுகளில் மீண்டும் வருகின்றனர்.

கல்வெட்டில் ஆய்மன்னர்கள்:

சடையனும் கருநந்தனும்:

கழுகுமலை கல்வெட்டில் எட்டாம் நூற்றாண்டை சார்ந்த விழிஞத்தை தலைநகராகக் கொண்ட சடையன்(கிபி788 வரை), அவன் மகன் கருநந்தன்(கிபி 788-857) குறிக்கப்பட்டுள்ளனர். ஜடிலவர்மப் பராந்தகப் பாண்டியன்(கிபி 765-805) இவர்களோடு போரிட்டுள்ளான். விழிஞம் அழிக்கப்பட்டு கொள்ளை இடப்பட்டது.  அருவிக்கரை அன்று அருவியூர் என்ற பெயரில் சிறந்த படைத்தலமாக இருந்திருக்கிறது. அவ்வூரும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. ஆய் மன்னர்கள்  பாண்டியர்கள் இடையேயான போர்ப்பற்றி வேள்விக்குடிச் செப்பேடு, சென்னை அருங்காட்சியக சீவரமங்கலச் செப்பேடு மற்றும் சின்னமன்னூர் செப்பேடும்(பெரிய சாசனம்) தெரிவிக்கின்றன. 8ஆம் நூற்றாண்டில் சடையன்  மற்றும் அவன் மகன் கருநந்தன் ஆகிய ஆய் மன்னர்கள்  பாண்டியர்களின் மேலதிகாரத்தை ஒப்பவில்லை அதனால் பாராந்தபாண்டியனுடன் அவன் முதல் வருகையின்போதிருந்து 10 வருடங்களாக ஆய் மன்னன் போரிட்டதாக திருவனந்தபுரம் கல்வெட்டு தெரிவிப்பதாகவும், அம்மன்னன் கருநந்தன் என அடையாளப்படுத்தலாம் என்றும், பின் ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியன் விழிஞத்தைக் கைப்பற்றினான் எனவும், கருநந்தனை அடுத்து கருநந்தருமன் வந்ததாகவும்  கருநந்தருமன் குறித்து எதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஸ்ரீதரமேனன்.


கோகருநந்தடக்கன்(கி.பி 857-885)

கருநந்தன் மகன் அடக்கன் அதாவது கோகருநந்தடக்கன் (கோ+கருநந்தன்+அடக்கன்) (கிபி857-885) இவன் தன்னை ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன் என அழைத்துக் கொண்டு பாண்டிய மேலாண்மையை ஏற்றுக்கொண்டான்.
கருநந்தடக்கன் பாண்டியனுக்கு கட்டுப்பட்ட ஆய் மன்னாக ஆட்சிபுரிந்து, போரில் வென்ற அரசர்களின் பெயரை அவர்களுக்கடங்கிய சிற்றரசர்கள் சூடிக்கொள்வதைப் போன்று மாறஞ்சடையானின் சிறப்பு பெயரான ஸ்ரீவல்லபன் என்ற பெயரை தனக்கு இட்டுக்கொண்டான். தன் மகனுக்கும் வரகுணன் என பாண்டியன் மாறன் மகன் இரண்டாம் வரகுணனின் பெயரைச்சூட்டியுள்ளான். இது ஆய் மன்னர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டியருக்கு கீழ் அடங்கியிருந்ததைக் காட்டுகிறது.  

நான்கு செப்பேடுகள்:

  திருவாங்கூரின் திருவனந்தபுரம் தலைமை அலுவலகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த ஆறு உதிரிச் செப்பேடுகளை பிரித்து பார்த்திவசேகரபுரம் செப்பேடு மற்றும் திருநந்திக்கரைச் செப்பேடு எனவும் அத்துடன் திற்பரப்பு செப்பேடு மற்றும் பாலியம் செப்பேடுகளையும் சேர்த்து நான்கு செப்பேடுகளாக வெளியிடுகிறார் திரு டி.ஏ. கோபிநாதராவ், திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை எண் ஒன்றில்(1910-1913). இச்சாசனங்கள் தற்போது திருவாங்கூர் தொல்லியல் துறையின் பராமரிப்பிலுள்ளன. அது பிற்கால ஆய்மன்னர்களின்  வரலாற்றுப் பக்கங்களை காட்டுகின்றன. இவை கருநந்தடக்கன் மற்றும் அவன் மகன் வரகுணன்  வழங்கிய தலா இருசெப்பேடுகளாகும்.

அ) பார்த்திவசேகரபுரச் செப்பேடு:   

மார்த்தாண்டம் தேங்காய்பட்டிணம் இடையே தாமிரபரணி ஆற்றங்கரையின் கிழக்கில் முன்சிறை, பார்த்திவசேகரபுரம் என்ற ஊர்கள் உள்ளன. அந்த பார்த்திவசேகரபுரம் தொடர்பான பிற்கால ஆய் மன்னன் கோக்கருநந்தடக்கன் வழங்கிய செப்பேடே இங்கு குறிப்பிட போகும் சாசனம். இது ஐந்து ஏடுகளைக் கொண்டுள்ளது. இருபுறமும் எழுதப்பெற்றது, முதல் ஏட்டின் தொடர்ச்சி அடுத்த ஏட்டில் இல்லை.  முழுமையான சாசனமாக கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற இடம் தெரியவில்லை. கோகருந்தடக்கன் மன்னனால் வெளியிடப்பட்டது.  திருவிடைக்கோடு மகாதேவர் கோயிலில் நந்தா விளக்கமைத்து நாள்தோறும் நெய் வழங்க ஏற்பாடு செய்ததை வட்டெழுத்தில் இந்த பெயரிலே கல்வெட்டாக அமைத்துள்ளான். ஆனால் அன்று வழங்கப்பட்ட வட்டெழுத்தைப் பயன்படுத்தாமல் பல்லவர் கால சாசனங்களில் பயன்படுத்தப்படும் தமிழால் இச்சாசனம் எழுதப்பட்டுள்ளது. ஏட்டின் எழுத்துக்கள் இருவர் எழுதியதாக காணப்படுகிறது. மொத்தம் 73 வரிகளைக் கொண்டுள்ளது.

ஆய் மன்னான கோகருந்தடக்கன் தன் சிறப்புப் பெயரில் அமைத்த பார்த்திவசேகரபுரச்சாலைப் பற்றியது இச்சாசனம். காந்தளூர்சாலையை மாதிரியாகக் கொண்ட தொண்ணூற்றைவர் சட்டர்களுக்கு அமைத்தச் சாலை மற்றும் கோயில் ஆகியவை நன்கு செயல்பட வகுத்த விரிவான திட்டங்களே இது.

சாசனம் “கலியுகக் கோட்டு நாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்தொன்பதினாயிரத்து எண்பத்து ஏழுசென்ற நாள் ஸ்வதிக் கோக் கருந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளில்” செய்யப்பட்டது. இதனை கலி அப்தம் 3967 கற்கடகமாதம் 15ஆம் நாள் அதாவது கிபி 866 ஜூலை 8ஆம் தேதி என சுவெல் மற்றும் ப்ளிட் ஆகிய தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்துமத நம்பிக்கையாளர்கள் மகாபாரதப்போர் முடிந்ததிலிருந்து கலியாண்டு துவங்குவதாக கருதுவர். அதுபோன்று மகாபாரதப்போர் முடிந்த கலியுக துவக்கமான கிமு 3100 என்பதிலிருந்து நாள் கணக்கிடப்பட்டுள்ளது.

முதல் ஏடு, எழுதப்பெற்ற நாள், மன்னன் உழக்குவிளை என்னும் நிலத்தை பிற நிலங்களை அதற்குப் பதலியாக பலதடவையாக கொடுத்து முன்சிறை ஊர்ச் சபையிடமிருந்து பெற்று தன் சிறப்புப்பெயரில் தொண்ணூற்றைவர்(95) சட்டர்க்கு உணவு மற்றும் ஊதியத்துடன் இணைந்த கல்விக்காக, காந்தளூர்ச்சாலைப் போன்று பார்த்திவசேகரபுரம்சாலையும் அதில் விஷ்ணுக்கோயிலையும் அமைத்து, அச்சாலை மற்றும் கோயில் பாராமரிப்புக்காக நிலங்கள் தானம் செய்ததை தெரிவிக்கிறது. 

இரண்டாம் ஏடு, கோயில் பணியாளர்கள் மற்றும் பூ வழங்குவோர் கடமைகள், நுந்தா விளக்கெரிக்க அளிக்கப்பட்ட தனநிலங்கள், பங்குனி விசாக நாளில் ஆறாட்டாக முடியும் ஏழுநாள் திருவிழா, அத்திருவிழா காலத்தில் கோயில் பணியாளர்களுக்கும், சட்டர்களுக்கும் இரட்டிப்பு ஊதியம், அதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் என்பன குறித்தது. 

மூன்றாம் ஏடு, சாந்திக்காரர், அகநாழிகை பணிச்செய்வோர், பஞ்சகவ்யம் தெளிப்போர், பூ வழங்குவோர், கோயில் வாத்தியக்காரர் ஆகியோர்களுக்கு வழங்கிய நிலங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.

நான்கு மற்றும் ஐந்தாம் ஏடுகள், மாய, செங்கழு, முடால, படைப்பா மற்றும் வள்ளுவ நாட்டு மக்கள் இச்சாலையை பாதுக்காக்க வேண்டிய பொறுப்புகள் பற்றி வலியுறுத்தப்படுவது.  மேலும் இந்த சாலையில் வேத மற்றும் த்ரைராஜ்யவ்யவஹா கல்வி மற்றும் உணவு பெறும் சட்டர்கள் எண்ணம் முறையே பவிழிய(பவிஷிய) பிரிவினர் (ரிக் வேதி) 45 பேர், தயிதிரிய(தைத்திரிய) பிரிவினர் (யஜூர் வேதி) 36 பேர், தலவகார(சாம வேதி) பிரிவினர் 14 பேர் என மொத்தம் 95 பேர், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றும் கற்க வேண்டிய முறை,  இக்கோயில் மற்றும் சாலைக்காக வழங்கப்பட்ட நிலங்களில் அதன் வரிவசூல் முறை, கோயில் பணியாளர்கள் சட்டர்களிடம் நடந்துக்கொள்ள வேண்டிய முறை மேற்படி சட்டர்களோ பணியார்களோ தவறிழைத்தால் வழங்கப்படும் தண்டம் மற்றும் தண்டனைகள் ஆகியவைக் குறித்தும்,  ஏட்டின் ஆணத்தி மற்றும் சாட்சி எழுத்தன் குறித்தும்  உள்ளது. ஐந்தாம் ஏட்டின் பின்புறம் சமஸ்கிருத ஸ்லோகம் ஸ்ரீவல்லபனை(கருந்தடக்கன்) விஷ்ணுவையும் சிலேடையாக வர்ணித்து புகழ்ந்தும் உள்ளது. 

இச்சாசனத்தின் சிறப்பாக கருதப்படுவது. கோயிலும் சாலையும் அமைக்க அதிகாரத்தை பயன்படுத்தி   இடம் பறிமுதல் செய்யாமல் முன்சிறை ஊருக்கு பதலி இடம் கொடுத்துப் பெற்றது. சட்டர்களுக்கு த்ரைராஜிய விவாகாரக் (தமிழக வழக்குப்படி சேர, சோழ பாண்டிய ராஜ்ய நிர்வாகக்) கல்வி அதாவது இன்றைய இந்திய சிவில் நிர்வாகப்பணிப் போன்று நிர்வாகயியல் கல்விச்சாலை மற்றும் ஆயுதப்பயிற்சியும்  நடத்தியது என்பன.   

  இச்சாசனம் பல ஊர்களின் பெயர்களை குறிப்பிடுகிறது. அவற்றில் சில  அப்பெயரால் ஆயிரத்து நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. முடாலம் (மிடாலம்), பசுங்குளம் (பைங்குளம்), முன்சிறை, குராத்தூர் (கிராத்தூர்), நெடுமங்குளம், மேற்பாற்கீழூர், தெங்கநாடு(தேங்காய்பட்டிணம்), விளப்பில், இளவேணாட்டுநல்லூர், பனையூர், காஞ்சிரக்குளம், குன்றத்தூர், கீழ்குளம், சிறுமண்ணூர், மீனச்சி (மீனச்சல்), குண்டூர், அருமுனை, ஆதனூர், படைப்பா, மாத்தூர், வெண்ணீர், பாகோடு, பாப்பிகைகோடு என்பன. மேலும் நாடு பெயர்கள் குறிப்பிடப்படுகிறது, அவை முடால நாடு, பொழிசூழ் நாடு, செங்கழு நாடு, வள்ளுவ நாடு, தெங்க நாடு, மாய நாடு, படைப்பா நாடு. ஆய் மன்னனின் நிலப்பரப்பு நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதன் நிர்வாகி கிழவன் என அழைக்கப்பட்டுள்ளான். நாடு தேசமாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டுள்ளது.  சாலையை மேலே குறிப்பிட்ட நாட்டுக்காரர்கள் ”அறமரு சாதி காக்கும் பரிசினாற் காப்பது”(சாசனவரி 46) போன்றுக் காக்க இச்சாசனம் வலியுறுத்துகிறது. 

தென்னாட்டு கோனாயின சடையன் (கருநந்தடக்கனின் பாட்டன்)(வரி17,22),  செங்கழு நாட்டு பாறையில் சயவஞ்சரனாயின சாத்தன் சடையன்(வரி31), செங்கழு நாட்டுக் குன்றத்தூர் குமாரசுவாமி பட்டன்(வரி32), ஓமாயனாட்டுச் சிறு மண்ணூர் இளையான் கண்டன்(வரி35), ஈயானஞ்சுவானுக்குங் குமரங் கண்டன்(வரி41), தெங்க நாட்டு வெண்ணீர் வெள்ளாளன் தெங்க நாட்டு கிழவனாயின சாத்த முருகன்(வரி67&72), ஓமாயனாட்டுப் பாகோட்டு பாப்பிகைகோட்டு திரையன், ஓமாயனாடு கிழவனாயின சிங்கங்குன்றப்போழன்(வரி73) என்றப் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.  இச்சாசனத்தின் ஆணத்தியாக சாத்த முருகனும், சாட்சி எழுத்தாக திரையனும் சிங்கங்குன்றப்போழனும் குறிக்கப்பட்டுள்ளனர். பெயர்கள் அடைமொழியோடு வழங்கப்பட்டுள்ளன. 

காணம், கழஞ்சி, காசு என்ற நாணயங்கள் சில இடங்களில் இச்சாசனத்தில்  தண்டம் பற்றிய  குறிப்பிடும்போது சொல்லப்பட்டுள்ளது எனவே கருநந்தடக்கன் காலத்தில் காணம், கழஞ்சி, காசு மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. 9ஆம் நூற்றாண்டில் காணம் 1, 21/2, 5 ,10, ஆகிய மதிப்புகளில் வெளியிடப்பட்டிருந்தன. அன்று ஒரு கழஞ்சி என்பது 10 காணம், ஒரு பழங்காசு என்பது 6 கழஞ்சி  ஆகும். இவை பொன் நாணயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டர்கள் தங்களுக்குள் வழக்கிட்டுக் கொண்டால், ஆயுதம்  பயன்படுத்தி புண் ஏற்படுத்தினால் ஐந்து காணம் பொன் தண்டம். உணவு நிறுத்துதல் போன்ற தண்டனைகள். வெளிக்கூட்டத்திற்கு ஆயுதம் எடுத்துச் செல்லக்கூடாது. மடத்தில் வெள்ளாட்டிகளை(கோயில் பெண்டிர்) வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் அரசர் ஆணையின்றி சாலையிலிருந்து விலக்கம். ஐந்து கழஞ்சி பொன் தண்டமும் அதுவரை பெறப்பட்டவைகளுக்கு பத்துமடங்கும் வழங்க வேண்டும், கிராமசபையினர் செலுத்த வேண்டியவரியை வழங்கவில்லை எனில் மூன்று பிரிவிலிருந்து மூன்று சட்டர்கள் சென்று 54 காணம் பொன் தண்டம் பெற வேண்டும். சாலைக்கான கடமையை மறுப்பவர் நியதி கழஞ்சி பொன் தண்டம் செலுத்தவேண்டும், சாலையில் உணவு பெறும் பணிமக்கள் சட்டரை பிழைச்சொன்னால் ஒரு காசு தண்டம் என தண்டனைக் குறிப்புகள் கடுமையாகயுள்ளன.

 வேதங்கள், அவற்றின் பிரிவான வியாகரணம், மற்றும் ப்ரோஹிதம், மூவரசர் ஆட்சிநிர்வாகத்திற்க்கான கல்வி அவற்றோடு ஆயுதப்பயிற்சி ஆகியவை ரிக், யஜூர், சாம வேதப்பிரிவு பிராமணர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும் கல்விச்சாலையாக இது செயல்பட்டுள்ளது. காந்தளூர்சாலை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டது. கோகருநந்தடக்கன் தன் ஆட்சிக் காலத்தில் நான்குச் சாலைகள் அமைத்துள்ளான். அவை காந்தளூர்ச்சாலை, பார்த்திவசேகரபுரம்சாலை, திருவல்லாச்சாலை மற்றும் மூழிகுளம்சாலை என்பர். பிற்காலத்தில் காந்தளூர்ச்சாலை ராஜராஜ சோழனால் அழிக்கப்பட்டது. இது தற்போது திருவனந்தபுரத்தில் வலியசாலை என அழைக்கப்படுவது என்கின்றனர். இது இந்தியாவில் மிக நீளமான அக்ரஹாரம் ஆகும்.

இச்சாசனம் தெரிவிப்பது, பிராமணர்களுக்கு சமுகத்திலும், ஆட்சியாதிகாராத்திலும் பங்கு வகிக்க வழங்கும் கல்விக்கான சாலை அமைக்க, பிராமண ஊர்களுக்கு(முன்சிறை) பதலி இடமாக நிலங்கள் பலமுறை அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வரை அளித்து பின் இடம் பெற்று சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நாட்டுக்குடிகளின் நிலங்கள் மற்றும் அவர்கள் வருமானங்கள், சாலை பராமரிப்பு மற்றும் ஊதியத்திற்காக, அக்குடிகளிலிடமிருந்து ஒரு ஆணை மூலம் பறித்தளிக்கப்பட்டிருக்கிறது. இச்சாசனத்தில் அந்த ஊர்களும் நாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறன. 

 காந்தளூர்ச்சாலையின் அனுபவம் இச்சாசன தண்டனை குறிப்பு  வழி  தெரியவருகிறது. பிராமணர்கள் பொது இடங்களில் ஆயுத துஷ்ப்ரையோகம் செய்பவர்களாக இருந்திருப்பதால் இதில் பொது இடங்களிலும், சாலையின் உள்ளும் ஆயுதம் பயன்படுத்த கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிராமணர்கள் அவர்களின் வேதப்பிரிவு சார்ந்து சண்டையிடுபவர்களாக இருந்திருக்கிறார்கள் அப்பிரிவின் அரசியல்  அதிகாரத்திற்கானதாக அது இருக்கலாம், எனவே கல்விச்சாலையினுள் சட்டர்களினிடை தகறாறு நடைப்பெற்றால் தண்டம் வழங்க சரத்து உள்ளது. கோயில் பணிப்பெண்டிரை பிராமணர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பதால் இச்சாசனம் சாலைக்குள் கோயில்பெண்டிரை(வெள்ளாட்டி) சட்டர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கிறது. 

ஆ) திற்பரப்பு சாசனம்

திற்பரப்பு குமரிமாவட்டத்தின் குற்றாலம் என அழைக்கப்படுவது. இவ்வூரில் கோதையாறு பதினைந்து மீட்டர்  உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. இங்கு சிவன் கோயில் உள்ளது. மூலவர் பெயர் வீரபத்திரர். இக்கோயிலில் கிடைத்த இரு ஏடுகளைக் கொண்ட சாசனம் இது. அவை சாசனத்தின் முதல் மற்றும் கடைசி ஏடுகளாகும். இரு ஏட்டிலும் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. முதல் ஏடு வடமொழி கிரந்த எழுத்து, கடைசி ஏடு பல்லவர் காலத் தமிழ் எழுத்து கொண்டுள்ளது. இடையில் எத்தனை ஏடுகள் என்பது தெரியாது. இதுவும் முழுமையான சாசனமாக கிடைக்கவில்லை. இதனை ஆய் அரசன் கருநந்தட்டக்கன் வழங்கியிருக்கிறான்.

முதல் ஏடு நமோ நாராயணாய என ஆரம்பித்து, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் சுலோகங்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் வணக்கமாக உள்ளன. பின்னர் தானமளித்த அரசனின் வம்சமான யாதவகுல பெருமை வர்ணிக்க தொடங்கும் போது ஏடு முடிந்து சாசனம் குறையாக முடிவுப் பெற்றுவிடுகிறது. 

கடைசி ஏடு சில ஊர்ப்பெயர் அடைமொழியோடு சில பட்டர்களின்) பெயரைக் கொண்டும், அதில் ரேகைப் பதித்து சாசனமாக்கியவன் பெயர்க் கொண்டும் முடிகிறது. தேவதான பிரம தேயமாக ஒர் ஊர் சாசனம் வழி வழங்கப் பட்டிருப்பதாக கருதுகின்றனர். ஊரின் பெயர் விவரம் ஏடு முழுமையற்றதாக இருப்பதால் தெரியவில்லை.

கடைசி வரி ”ஸ்ரீ கோகருநந்தடக்கற்கு ஆயுதங்கள் செய்வான் விழிஞத்து பெரும் பணை கனாயின அவியலன்றடக்கன் இலேகை”  எனவே சாசனம் கருநந்தடக்கன் அல்லது அவன் மகன் வரகுணன் காலம் சார்ந்ததாக இருக்கலாம். மேலும் இது விழிஞத்தில் ஆயுத தயாரிக்குமிடம் இருந்ததாகத்  தெரிவிக்கிறது. 

இ) பாலியத்து சாசனம்

    திருவாங்கூர் தொல்லியல் அறிஞர் திரு டி.ஏ. கோபிநாதராவ் கேரள பாலியத்து அச்சன் வீட்டில் இச்சாசனத்தை கண்டெடுத்தார். பாலியயம் என்பது புத்தகல்விச்சாலை என்கிறார் ஸ்ரீதரமேனன். கேராளாவில் பல ஊர்களிம் பெயர்கள் பள்ளி எனக்கொண்டுள்ளது. புத்த, கிருத்துவ, இஸ்லமிய ஆலயங்கள் பள்ளி என்று கேரளாவில் அழைப்பப்படுகிறன.  பள்ளி என்பது பாலி என மருவி பாலி+அயம் பாலியம் என ஆகியுள்ளது. இங்கு இரு ஏடுகள் கிடைக்கப்பெற்றன. அதில் சாசனம் இரு புறமும் வழங்கப்பட்டுள்ளது. முதல் ஏட்டின் முன்புறம் தமிழால் எழுதப்பட்டுள்ளது. இதன் வரி வடிவம் பல்லவர் கடைசிகால மற்றும் சோழர் ஆரம்பகால எழுத்து வடிவத்தை ஒட்டியது. ஏட்டின் பிற பகுதிகள் வட மொழி நாகரி எழுத்தால் உள்ளது. 

    முதல் ஏட்டில் தானமளிக்கப்பட்ட நிலத்தின் எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது. “திருமூலபாதத்து பாடாரர்க் கட்டிகுடுத்” என்ற வாசகத்தோடு முன்பக்க ஏட்டின் தமிழ்பகுதி முடிய, சாசன பிறதமிழ்பகுதி ஏடுகள் கிடைக்கவில்லை. ஏட்டின் பின்புற வடமொழி கடைசிப் பகுதிக்கும் இரண்டாம் ஏட்டின் துவக்கதிற்கும் தொடர்பில்லை. புத்தபகவானுக்கு வணக்கம் கூறும் சுலோகத்துடன் ஆரம்பிக்கிறது.  புத்த மும்மணியைச் சார்ந்த தர்மம், சங்கத்திற்கு அது வணக்கம் செய்கிறது. யாதவ (ஆய்) குலத்தின் புகழைச் சொல்கிறது. மன்னன் வரகுணன் தன் இனத்திடம் ஆய் வம்சத்தையும், நாட்டையும் காக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைப்பதாக அமைந்து  மங்கலம் உண்டாகும் படிக்கூறி ”ந கோத் துவாதசி” என முடிகிறது.  

  திருவிதாங்கூர் தொல்லியியல் வரிசை எண் 1ல்(1910-13) இதை வெளியிடும் போது  திரு டி.ஏ. கோபிநாதராவ் அவர்களுக்கு இதில் குறிப்பிடப்படும் திருமூலபாதத்து பாடாரர் என்பது புத்தனா? சிவனா? மாலா? என தெரியவில்லை என்கிறார். பின்னர் திருவிதாங்கூர் தொல்லியியல் வரிசை எண்2ல்(1920) திருமூலத்து பாடாரர், புத்தனைக் குறிக்கிறது என்ற முடிவுக்கு மூஷிக வம்ச வடமொழி புராணத்தின் செய்தியை அறிந்தபின் வருகிறேன் என்கிறார். இது கருநந்தடக்கன் மகன் வரகுணன் காலத்தியது. மேற்கு கடற்கரைப் பட்டிணத்தில் திருமூல படாரர் (ஸ்ரீமூலவாசக்) கோயில் அழிந்துப் போவதற்குமுன் நல்ல நிலையில் இருந்தபோது நிலம் அளித்த தகவல் கிடைக்கிறது. ஸ்ரீமூலவாசகம் ஹீனயானம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து, அது மாகயானச்சாலையாக மாறிப்பின்னர் தந்திரிக் கல்விச்சாலையாக மாறிப்போனது என்கிறார் எஸ் என் சதாசிவன் அவர்கள். இது திருக்குன்னம்புழா அருகில் இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். இங்கிருந்த புத்தா, யசோத மற்றும் ராகுல் என இருக்கும் இவ்வொற்றை விக்கிரம்  கிபி1675ல் திருகுன்னம்புழாக்கோயிலில் வைத்திருந்ததாகக் குறிப்பிடுவர். இந்த இடம் அப்போது சேர ஆளுககைக்குள் உள்ளது என்பர். நிலத்தோடு புலையர்களையும் தானம் செய்யப்பட்டதாகக் கூறுவர். இந்த ஸ்ரீமூலவாசகம் சோழர்களால் அழிக்கப்ப்ட்டிருக்கலாம்  அல்லது 15ஆம் நுற்றாண்டில் இடப்பள்ளியை ஆட்சிச் செய்த பிராமணர்களால் அழிக்கப்பட்டிருகலாம் அல்லது கடல் கொண்டுப்போயிருக்கலாம் என்கின்றனர்.  

    ஏட்டின் வடமொழி சுலோகங்கள் “யாதவகுலமானது மற்ற அரசர்களுக்கு தலையாக சந்திரன் நட்சத்திரம் உள்ளவரை நீடித்திருக்கும்,  பக்தினால் வணங்கியவனும், தன் சேனைத் தொகுதியால் எழுப்பட்ட தூசிகளாகிய புகையினால் தன் எதிரிகளின் மனைவிகளை அழச்செய்தவனுமான விலிஞ்ஜம்(விழிஞம்) என்ற நாட்டின் அரசனால்…”  என்ற இச்சுலோகத்தின் தொடர்ச்சியேடு கிடைக்கவில்லை.   மேலும் இச்சாசன சுலோகம், சூரியன் மகரராசியில்(தை மாதம்) இருக்கும் போது  பௌஷ மாத மிருகஷிரிட நட்சத்திரம் கூடிய வியாழக்கிழமை அரசன் தன் முப்பத்து ஐந்தாவது வயதில் புத்தக்கோயிலுக்கு நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. இந்நிலத்தின் திசை, எல்லை முதலான அனைத்தும் தமிழ் வசனத்தில் காண்க என்கிறது. மேலும் வீரகொத்தன் என்பவனை தானபூமியைக் காக்கும் பொறுப்பில் அரசன் அமர்த்தியதை சொல்கிறது. பின்பு  ”எவன், பிறர் தன்னிடம் இரத்தலை அன்பினால் மட்டும் விரும்புகிறானோ எவன் மற்றவர்களிடம் எப்போதும், கனவிலும் கூட இரப்பதில்லையோ அப்படிப்பட்ட புண்ணியாத்மாவான வரகுணன் என்ற அரசன் தன் வம்சத்தவர்களை “நீங்கள் இந்த வம்சத்தை அழிக்ககூடாது“ என்று இரந்து வேண்டுகிறான். மறுபடியும் இந்த மேன்மையுள்ள அரசன் தலைவணங்கிப் பக்தர்களின் அன்பர்களான எல்லோரையும் கேட்டுக்கொள்கிறான் ”
”இந்தப் பூமியை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, மனைவியை மற்றொருவர் அனுபவிக்கும் ஆபத்து ஏற்ப்படுமோ என்று காப்பதுபோல், இதையும் அந்த அந்த காலத்தில் காப்பற்ற வேண்டும்” ஓ மனிதர்களே மனத்தைப் புண்ணியம் செய்வதற்கு விரைவுபடுத்துங்கள். கொடியவனான யமன் உங்களுடைய காலத்தை எதிர்ப்பார்த்து வாய் திறந்துக் கொண்டு உங்கள் அருகிலே சுற்றி வருகிறான். அந்த யமனுக்கு நன்மை செய்ய விரும்பிச் சூரியன் தன்னுடைய பயணத்தால் !உங்களுடையா ஆயுளின் மீதிப் பாகத்தை விரைவாக உறிஞ்சிவிடுகிறான். மங்களம் உண்டாகட்டும். ந கோத் துவாதசி” என சுலோகங்கள் முடிகின்றன. 

     இதிலிருந்து புத்தக்கோயிலுக்கு நிலமளித்த விவரமிருந்தாலும் வரகுணன் என்ற  மன்னன் தன்நாட்டில் தன்மக்களால் தனிமையாக விடப்பட்ட நிலை தெரியவருகிறது. இதில் தெரிவிக்கப்படும் வீரகொத்தன் என்பவன் சேரன் கோதை ரவிவர்மா காலத்தில் கோயிலதிகாரியாக  இருந்த இந்துகோதைவர்மா ஆகும் . இவர் கோதை ரவிவர்மனுக்கு பின் ஆட்சிக்கு வருகிறார்.

பார்த்திவசேகரபுரம் கோவில்:

பார்த்திவபுரம் :

குமரிமாவட்டம், புதுக்கடையிலிருந்து சுமார் ஒரோ கிலோமீட்டர் தொலைவில் இவ்வூரினை சென்றடையலாம். ஆய்வம்ச மன்னன் கருநந்ததடக்கனால் கட்டப்பட்ட கோவில் இது.  கல்வெட்டுப்படி இவ்வூரின் பெயர் பார்த்திவசேகரபுரம். ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த கோவில். சங்ககால சிறப்புமிக்க குலமான ஆய்வம்சதோன்றல் மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் இன்று வெளித்தோற்றத்தில் அவ்வாறு தெரியாவிடினும், கூர்ந்து நோக்குங்கால், அதன் கருவறை  சுற்றுச்சுவர் விமானம், கோபுரம்  அதிட்டானம் என அதன் தொன்மை புலப்படும். 


பார்திவசேகரபுர கோவில் கல்வெட்டுகள்:

இங்கு மொத்தம் 5 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளது, காமன் தடக்கன் என்பவர் இறைவனுக்கு நிலக்கொடை தானமளிக்கிறார், இதுவே தொன்மையான கல்வெட்டு, கி.பி923 ல் மன்ர் பெயரிலில்லாத கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுள்ளது. பஞ்சவன் பிரம்மாதிராஜனாயின குமரன் நாராயணன் என்பவர் இரண்டு விளக்குகள் கொடையளிக்கிறார். இரு சோழர் கல்வெட்டும், சுந்தரசோழ பாண்டியர் கல்வெட்டும் உள்ளது. இவையும் நிலக்கொடை, நந்தாவிளக்கு கொடை குறித்த கல்வெட்டுகளே.
ஆய்குல முன்னோன் புகழ்வாய்ந்த கருந்தடத்தக்கன் கட்டிய இக்கற்றளி இன்றும் தொன்மைமாறாமல் நன்முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது! ஆய்மன்னர்களின் கலைசிறப்பினை இங்கு   காணலாம்.

விக்ரமாதித்ய வரகுணன்:

இவரது கல்வெட்டுகள் சிதறால், திருநந்திக்கரை, கழுகுமலை, போன்ற இடங்களில் காணப்படுகிறது. இம்மன்னன் சைவ, வைணவ, சமண சமயங்களை ஆதரித்துள்ளான். சிதறாலில் நிறைய சமண இயக்கியர் உருவங்கள் செய்துள்ளமை தெரியவருகிறது.இவன் காலத்தில் பராந்தக சோழன்(907-955) பாண்டியன் மாறவர்மா ராஜசிம்கா(இரண்டு)(905-920)வைத் தோற்கடிக்கிறான். சோழனை எதிற்கும் போரில் வரகுணன் பாண்டியனுக்கு ஆதரவாக நிற்கிறான். பாண்டியநாடு சோழநாட்டுன் இணைக்கப்படுகிறது. அத்துடன் நாஞ்சில் நாடும் சோழ ஆளுகைக்குள் போகிறது. இதன்பின் இம்மன்னர்கள் குறித்த தகவல்கள் இல்லை.

ஆய்மன்னர்கள் கலைப்பாணி:

திருநந்திக்கரை குடைவரை கோவில்:

முதல் கல்வெட்டு:

இங்கே பழமையான இரண்டு கல்வெட்டுகள் உள்ளது. இதில் அரசர் பெயரும் ஆட்சியாண்டும் இல்லை. ஆனால் இதனை ஆய்மன்னர் விக்ரமாதித்ய வரகுணனின் கல்வெட்டாக கருதுகின்றனர்.குடவரையின் அமைப்பும் பழையதாகவேயுள்ளது.

இக்கல்வெட்டில் உள்ள செய்தியாவது இவ்வூர் பெருமக்களும், தளியாள்வானும் குருந்தம்பாக்கத்தில் கூடி இவ்வூரின் பெயரை ஸ்ரீநந்திமங்கம் என மாற்றுகின்றனர். இவ்வூரின் எல்லையாய் பெயரறியாத ஒரு ஆற்றுடன் நந்தியாறும், முதுகோனூரும் பாக்கமங்கலமும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர்கள் இன்னும் அதேபெயரில் வழங்கப்படுவது சிறப்பு.





இரண்டாம் கல்வெட்டு:

இக்கல்வெட்டும் முதல் கல்வெட்டின் எழுத்தமைதியிலுள்ளது இவ்வூரைச்சேர்ந்த திருவல்லாழ் மகாதேவர்க்கு மங்கலச்சேரி நாராயணன் சிவாகரன் அளித்த நிலக்கொடைகளை விரிவாய் கூறுகிறது.

சிதறால்:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்காவில் இவ்வூர் அமைந்துள்ளது! இங்குள்ள மலைகளில் இயற்கையாகவே சில குகைகள் காணப்படுகிறது, தற்சமயம் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, தொல்லியல்துறை ஏற்பாட்டில் மலைஏற்றத்திற்கு வாகாக படிகள் வெட்டப்பட்டுள்ளது. சுமார் ஒரு கி.மீ தொலைவில் மலையேற்றம் ஏறியபின் இச்சமண தலத்தை அடையலாம். கல்வெட்டில் இம்மலை திருச்சாரணத்து மலை என அழைக்கப்படுகிறது. சாரணர்களாகிய சமணர்கள் வாழ்ந்ததினால் இம்மலைக்கு இப்பெயர் வந்திருக்க கூடும்.



 
9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்மன்னன் விக்ரமவரகுணவர்மனது கல்வெட்டு இங்கு பழமையானது இவர் இக்கோவிலிலுள்ள இறைவிக்கு (பட்டாரிக்கு) அணிகலன்கள் கொடுத்ததை தெரிவிக்கிறது. இதனால் இந்த இறைவி(பகவதி) சமண சமய யக்ஷி யாக இருந்திருக்ககூடும்.
மேலும் இக்கோவில் பின்னர் 13 ம் நூற்றாண்டளவில் இந்துமத கோவிலாய் மாற்றமடைந்ததை பிற்காலத்திய கல்வெட்டுகள் வாயிலாகவும், கட்டுமானம் வாயிலாகவும் உணரலாம்.

குறத்தியறை குடைவரை:

அழகியபாண்டியபுரம் ஊராட்சியில் உள்ளது இவ்வூர் இங்கு ஓர் எளிய குடைவரை உள்ளது. குடைவரைப்பெருமாள் அவ்வையாரம்மன் என அழைக்கப்படுகிறார். இங்கே மிகவும் அழகிய நின்றநிலைப்பெருமாள் சிலையும் சிதைந்த அமர்ந்தநிலை பெருமாள் சிலையும் உள்ளது. இவை ஆய்மன்னர்களின் கலைப்பாணியாக கருதப்படுகிறது. இவை தவிர கன்னியாகுமாரி அருங்காட்சியகத்திலும் ஓர் அழகிய பெருமாள்சிலை உள்ளது.



விழிஞம்:

இக்கோவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. இதில் கல்வெட்டு இல்லையெனினும், ஆய் மன்னர்களின் பழைய நகராய் விழிஞம் இருந்ததினால், இக்குடைவரை அவர்களாய் குடைவித்ததாய் கருதப்படுகிறது.


Reference :

1.வேளிர் வரலாறு
2.பாண்டியர் செப்பேடுகள் பத்து
3.தென்மாவட்ட குடைவரைகள்
4. 
ஆய் மன்னர்கள் நான்கு செப்பேடுகள் மற்றும் சில சேதிகள்
ச. அனந்த சுப்பிரமணியன்( திணை ஜூன் 2015- ஆகஸ்டு 2015 இதழில் வெளிவந்த கட்டுரை)