Friday, 31 July 2020

மலையமான்கள்

தமிழக சிற்றரசர்கள்-02

மலையமான்கள்:

இலக்கியத்தில் மலையமான்கள்:

மலையமான்களில் முதல் மன்னனாகவும், தலைசிறந்தவராகவும் அறியப்படுபவர் திருமுடிக்காரி.மூவேந்தர்களைப் போல முடியணிந்ததால் "திருமுடிக்காரி" என இவர் பெயர் பெற்றார். கடையேழு வள்ளல்களில் ஒருவராய் இவர் போற்றப்படுகிறார்.

"காரி யூர்ந்து பேரமர் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையன்" என புறநானூறு சிறப்பித்து கூறுகிறது. இவனது குதிரைக்கும் காரி என்றே பெயர். குதிரை வடிவில் இவர் காசு அச்சடித்துள்ளார். இக்காசுகள் திருக்கோவிலூர் சுற்றுவட்டார ஆற்றங்கரைகளில் நிறைய கிடைத்துள்ளது. திருக்கோவிலூரை தலைமையிடமாய் கொண்டு இவர் அரசு புரிந்தார் என்பதனை, 

"துஞ்சாமுழவின் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி" என்ற அகநானூற்று பாடல் ஒன்றின் வாயிலாய் அறியலாம். இவனது வள்ளல்தன்மை குறித்து நிறைய பாடல் புறநானூற்றில் வருகிறது. முள்ளூரில் பெய்யும் மழையின் துளிகளை விட தன்னை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு இவன் நிறைய தேர்களை அளித்தான் என புறநானூறு கூறுகிறது.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடியோரே
நாள், நேரம் பார்த்து காரி கொடையளிப்பதில்லை, அவனிடம் சென்றாலே வாரி வழங்குவான் கபிலர் காரியின் கொடைத்தன்மையை புகழ்கிறார்.

 மூவேந்தர்களில் காரி எவன் பக்கம் இருக்கிறாரோ அவரே பெற்றிபெறுவர் என சங்க இலக்கியங்கள் இவரை புகழ்ந்து பாடுகிறது.

குன்றத்து அன்ன களிறு பெயரக்
கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
வெலீஇயோன் இவன் எனக்
கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
விரைந்துவந்து சமம் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூறும்மே”
(புறநானூறு, 125) 
 திருமுடிக்காரி சோழனுக்குப் போர் உதவி புரிந்திருக்கிறான். ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்தனர். இவர்கள் இருவரில் சோழனுக்குச் சார்பாய் காரி நின்று வெற்றியைப் பெற்றுத் தந்தான். பின்னொரு சமயம் சேரனுக்கும் உதவிபுரிந்து சோழனை தோற்கடித்துள்ளான். இதிலிருந்து வேளிர் குடிகளில் மலையமான்கள் வலிமை பொருந்திய படைபலம் மிக்கவர்கள் என அறியலாம். ஆநிரை கவரும் வெட்சிபோரில் தலைமையேற்று குழுவாய் சென்று, கவர்ந்த ஆநிரைகளை தம் மக்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளான் திருமுடிக்காரி.

சக வேளிருடன் போர்:

திருமுடிக்காரி தன் சக வேளிர் இனத்தவருடன் பகைமை ஏற்ப்பட்டு போரிட்டுள்ளான், ஏழு வள்ளல்களில் ஒருவனான, கொல்லிமலைப்பகுதி அரசனான 'வல்வில் ஓரி' யுடன் போரிட்டு, அவனைக்கொன்று அவனது நகரிலேயே வீறுகொண்டு நடந்து வந்ததை,
.
"ஓரிக்கொன்ற ஒருபெருந் தெருவிற்
காரி புக்க நேரார் புலம்போல்"

என்ற நற்றிணை பாடலில் கபிலர் பாடுகிறார். இந்நிகழ்வினால் திருமுடிக்காரி "கொல்லிமலை பொருளன்" எனும் சிறப்புப் பெயர் பெற்றான். சக வேளிர்களின் பகைமையை சம்பாதித்த திருமுடிக்காரி இறுதியில் அதியமானின் தகடூரை தாக்கி அளித்தான். வெஞ்சினம் கொண்ட அதியன் பிரிதொரு சமயம், தன்படையோடு திருக்கோவிலூரை தாக்கி பெருஞ்சேதப்படுத்தினான். இப்போருக்குப்பின் திருமுடிக்காரி குறித்த பாடல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருங்கால் இப்போரில் அவன் இறந்திருக்கக்கூடும்.

திருமுடிக்காரியின் மகன்:

திருமுடிக்காரியின் மறைவுக்குப்பின் அவனது மகன் "மலையமான் சோழிய ஏனாதி திருக்கன்னன்" என்பவன் அரசனாகிறான், போரில் தோற்ற சோழன் ஒருவனை தனக்குரிய முள்ளூரில் வைத்து பாதுகாத்தவன் திருக்கன்னன் என இவனது வீரத்தினை புறநானூறு கூறுகிறது.

 பறம்பு நாட்டை ஆண்ட பாரி, குறுநில மன்னன்.கடையெழு வள்ளல்களில் ஒருவன்,முல்லைக்கொடி ஒன்று பற்றிக் கொள்ளக் கொம்பு இல்லாது வாடுவது கண்டு தன் தேரை அதற்குக் கொடுத்தவன். கபிலர் சங்கப் புலவருள் புகழ் மிக்கவர். பாரியோடு நீண்ட காலம் உடன் வாழ்ந்து நட்புச் கொண்டவர். மூவேந்தர்களும் கூட்டணியமைத்து பாரியை போரில் கொன்றனர்.பாரி இறந்தபின், பாரியின் மகளிரான அங்கவை, சங்கவையை அழைத்துக் கொண்டு வேறு நாடு சென்று வேளிர்களிடம் அப்பெண்களை மணமுடிக்க வேண்டினார், மூவேந்தரின் பகைமை இதனால் வரும் என அஞ்சி அவர்கள் மறுக்க இறுதியில் திருக்கோவிலூர் வந்தடைந்து அன்றைய மலையமானிடம் இப்பெண்களை ஒப்படைத்துவிட்டு, பின் நண்பனை எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் என கூறுவர். இச்செய்திக்குரிய இலக்கியம் நமக்கு கிடைக்காவிடினும், பிற்கால சோழரான ராஜராஜப்பெருவேந்தன் கல்வெட்டு இச்செய்தியை கூறுகிறது. கபிலர் காலத்தில் வாழ்ந்த திருக்கன்னன் அந்த இரு பெண்களுக்கும் புகழிடம் கொடுத்த மலையமானாய் இருக்க வாய்ப்புள்ளது.

இராஜராஜனின் தாய் மலையமான் குடியை சார்ந்தவர் என்பதும், அவர் சுந்தரசோழர் இறந்ததும் உன்கட்டை ஏறியிறந்தார் என்பதனயும் மேலும் கபிலர்பற்றிய குறிப்பும் கீழ்க்கண்ட பாடல்வடிவ கல்வெட்டின் மூலம் அறியலாம்.

(தண்டமிழ் நாடன் சண்டப ராக்கிரமன்
    றிண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான்
    செந்திரு மடந்தைமன் ஸரீராச ராசன்
    இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
    புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 
    கரந்து கரவாக் காரிகை சுரந்த
    முலைமிகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந்
    தலைமகற் பிரியாத் தைய்யல் நிலைபெறும்
    தூண்டா விளக்கு..............
    ........ ......... .......சி சொல்லிய - - - - - - - - - - -
    வரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான்
    பரைசைவண் களிற்றுப் பூழியன் விரைசெயு
    மாதவித் தொங்கல் மணிமுடி வளவன்
    சுந்தர சோழன் மந்தர தாரன்
    திருப்புய முயங்குந் தேவி விருப்புடன் - - - - - - - 
    வந்துதித் தருளிய மலையர் திருக்குலத்
    தோரன் மையாக தமரகத் தொன்மையிற்
    குலதெய்வ ........ கொண்டது நலமிகுங்
    கவசந் தொடுத்த கவின்கொளக் கதிர்நுதித்
    துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் - - - - 
    புளகப் புதவக் களகக் கோபுர
    வாயின் மாட மாளிகை வீதித்
    தேசாந் தன்மைத் தென்திருக் கோவலூ
    ரிசரந் தன்றக் கவன்றது மிசரங்
    குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக் - - - - -
    காளா கருவுங் கமழ்சந் தனமுந்
    தாளார் திரளச் சாளமு நீளார்
    குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற்
    பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர்
    புதுமத கிடறிப் போர்க்கலிங் கிடந்து - - - - - - -
    மொதுமொது முதுதிரை விலகி கதுமென
    வன்கரை பொருதுவருபுனற் பெண்ணைத்
    தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
    மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்
    தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் - - - - - - 
    மூரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப்
    பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை
    யலைபுன லழுவத் தந்தரி க்ஷஞ்செல
    மினல்புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்
    கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் - - - - - - 
    பேரட் டான வீரட் டானம்)


12ம் நூற்றாண்டு இலக்கியமான திருத்தொண்டர் புராணம் என கூறப்படும் பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றை கூறுகிறது. 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் திருத்தொண்டத்தொகை மூலமாய் வைத்து சேக்கிழாரால் எழுதப்பட்டது பெரியபுராணம். இதில் மலையமான்கள் ஒருசிலரைப்பற்றி குறிப்புகள் வருகிறது. எனவே இக்காலத்திய மலையமான்களை பல்லவர்காலமான கி.பி 5-8 ம் நூற்றாண்டு என கருதலாம். சங்ககாலத்திற்கு பின் இவர்களைப்பற்றி கிடைக்கும் குறிப்புகள் பெரியபுராணம் வாயிலாகவே அறிய முடிகிறது. இப்புராணத்தில் மெய்ப்பொருள் நாயன்மார் மலையமான் குடியை சேர்ந்தவராய் அறியப்படுகிறது. இவர் புராணத்தை கீழுள்ள இணைப்பில் விரிவாய் காணலாம். 


இப்புராணத்தில் மலையமானை எதிர்த்த மற்றுமொரு சிற்றரசனாய் "முத்தரசன்" என்பவரை சேக்கிழார் கூறுகிறார். இதே காலகட்டத்தில் வானகோ முத்தரசன் என்பவரின் நடுகற்கள் செங்கம் பகுதியில் கிடைக்கிறது. இவர்கள் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆளுகையில் இருந்தவர்கள் இந்நடுகல் கூறுகிறது. இப்பகுதியிலிருந்த மற்றுமொரு ஆளுமைமிக்கவனாய் "மாந்தபருமன்" என்பவனை அங்குள்ள நடுகற்கள் கூறுகிறது. இவ்விருக்குடியினருக்கும் பகைமை இருந்துள்ளது. மாந்தபருமருக்கு ஆதரவாய் மலையமான் இருந்திருக்கக்கூடும். ஆகவே 'வானகோமுத்தரசர்" அடிக்கடி திருக்கோவிலூரை தாக்கியுள்ளார், இந்நிகழ்வை சேக்கிழார்,

"இன்னவா றொழுகு நாளில் 
    இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் 
    ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை 
    பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப் 
    பரிபவப் பட்டுப் போனான்"

என மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் 5 ம் பாடலில் கூறுகிறார். எனவே மெய்ப்பொருள் நாயன்மார் காலத்தை 7 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாய் கூறலாம். தஞ்சைப் பெரியகோவிலில் இந்நாயன்மாருக்கு ராஜராஜனின் அதிகாரியான "பொய்கைநாட்டு கிழான் தென்னவன் மூவேந்த வேளான்" உலோகபடிமம் எழுப்பியதை அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. "தத்தா நமரே காண் என்ற மிலாடுடையான்" என இவ்வடியாரை கல்வெட்டில் காணலாம். மலைநாடுடையான் என்தே பிற்காலத்தில் "மிலாடுடையான்" என அழைக்கப்பட்டது.

கல்வெட்டில் மலையமான்கள்:
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் கல்வெட்டு பொறிப்புடன் 9 ம் நூற்றாண்டின் முற்பகுதியாய் கருதத்தக்க ஒரு கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.
" ஸ்ரீ முக்குல மலையமான் சாதன்"
என அதில் கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கிளியூர் பெருமான்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில், பெரியசெவலை அருகில் உள்ள ஊர் "கிளியூர்" இவ்வூரை அடையாளப்படுத்தியே "கிளியூர் மலையமான்" என பிற்கால சோழர் கல்வெட்டில் தம்மை மலையமான்கள் அழைத்துக் கொண்டனர். இம்மரபில் முதல் மலையமானாய் அறியப்படுபவர் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டில் வருகிறார்.(ARE 1927&28 No.151) கிளியூர் பெருமானார் மிலாடுடையார் கயிறூர்ப் பெருமானார், எனும் பெயருடைய அதிகாரியின் மனைவியான ராஜதேவி தேசாதக்கிய பெருமானார் என்பவர் திருக்கோவிலூர் வீரட்டானத்திற்கு 100 ஆடுகள் நிவந்தமளித்துள்ளார்.

நரசிம்மவர்மன்:
இதே காலகட்டத்தில் சத்திநாதன், சித்தவடவன்,மிலாடுடையான்,நரசிம்மவர்மன் என பல சிறப்புபெயர்களில் அழைக்கப்பட்ட மற்றொரு மலையமான் பராந்தகர் காலம் முதல் உத்தமசோழன் காலம் வரையிலும் வருகிறார். பராந்தகரின் புதல்வன் ராஜாதித்தன் இராஷ்டிரகூடரோடு நடந்த தக்கோலபோரில் இறக்க தொண்டைநாடும், நடுநாட்டில் பலபகுதியும் ராஷ்ட்ரகூடரான கன்னரதேவன் வசம் போகிறது. அச்சமயம் நரசிம்மவர்மன் கன்னரதேவனின் ஆளுகைக்குட்பட்ட அரசனாகி, திருநாமநல்லூரில் சில தானங்கள் தருகிறான். அதில்,

"ஸ்லஸ்திஸ்ரீ கன்னரதேவருக்கு யாண்டு பதினேழாவது முனைப்பாடி திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரத்து மகாதேவருக்கு,
ஸ்வஸ்திஸ்ரீ சுக்ரான்வய உதயாசல ஆதித்ய சக்திநாத சிம்ஹத்வஜ சிகிமகர லாஞ்சன மலைய குலோத்பவ மலையகுல சூளாமணி ஸ்ரீமத் நரசிம்ஹவர்ம மிலாடுடைய நாட்டான் சித்தவடவன்" 

என கல்வெட்டில் கன்னரதேவனுக்கு அடங்கிய சிற்றரசனாக கூறிகொள்கிறான். இவனது மனைவி சேதிமாதேவியார் என்பவர் திருப்பழனம்,திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி ஆகிய கோவில்களுக்கு நிவந்தம் அளித்துள்ளார்.இவரின் இயற்பெயர் "ஏகவீரன் தன்ம சங்கடியார்" என திருமலை கல்வெட்டு வாயிலாய் அறியலாம். இந்த நரசிம்மவர்மனின் மகளை உத்தமசோழன் மணந்துள்ளார்.

விக்ரமசோழ மிலாடுடையான்:

ராஜராஜசோழனின் தாய் வானவன் மாதேவியின் தந்தை இவர். இவரது மனைவி மிலாடுடையதேவி எனப்படும் 'புலிசய்யன்சாமி அப்பை" என்பவராவார். இவர் காலத்தில் படைத்தலைவர்களாக நிறைய மலையமான்கள் பெயர் வருகிறது. 

உத்தமசோழ மிலாடுடையார்:

விக்ரமசோழ மிலாடுடையாருக்கு அடுத்து உத்தமசோழ மிலாடுடையார் ஆட்சிக்கு வருகிறார். பெருவீரரான இவர் ராஜேந்திரசோழனின் மருமகனாகிய ராசராசநரேந்திரனுக்கு ஆதரவாய் போர்புரிய மேலைசாளுக்கியம் சென்று "கலிதிண்டி" எனும் இடத்தில் இறக்க அவருக்கொரு பள்ளிப்படை கோவில் அங்கு எழுப்பப்பட்டது.இவரது மனைவி கணபதி மயிலாடி.

இவர் காலத்திலும் இவருக்கு பின்னர் குலோத்துங்கன் காலம் வரையிலும் சில மிலாடுடையார் வருகின்றனர். அவர்கள் பெயர்கள்:
1.அருமொழிதேவ மிலாடுடையான்
2.இராஜேந்திரசோழ மிலாடுடையான்
3.முடிகொண்ட சோழ மிலாடுடையான்
4.செம்பியன் மிலாடுடையான்
5.கங்கைகொண்ட சோழ மிலாடுடையான்
6.இரணகேசரி நரசிம்மவர்ரேன்
7.கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வான்

குலோத்துங்கன் கால மலையமான்கள்:

வாணகோப்பாடி நாட்டை ஆண்ட மலையமான்கள் பிற்காலத்தில் வாணக்கோப்பாடி அரையர் எனும் பொருளில் தம்மை வாணகோவரையர் என கல்வெட்டில் பொறித்துக்கொண்டனர். இதே காலகட்டத்தில் மலையமான்களின் மற்றொரு கிளையினர் மலையமான், சேதிராயன் மிலாடுடையான் எனவும் அழைத்துக்கொண்டு ஆட்சி புரிந்தனர்.
 அம்மலையமான்களின் பெயர்கள்:
1.ராஜராஜசேதிராயன்
2.ராஜேந்திர சோழ மலையமான்
3.மலையகுலராயர்
4.ராஜேந்திரசோழ சேதிராயன்
5.குலோத்துங்க சோழ சேதிராயன்

மலையமான் அதிகாரிகள்:
1.தில்லை நாயகன் தேவர்கண்டன் அகமுடையான் மலையனான இராஜேந்திர சோழ சேதிராயன்.
2.மலையமான் திருக்கலை மருந்தன் ஆழ்வானாங்ககார மலையமான்
3.வேளக்காரன் ராஜராஜ சேதிராயன்

மூன்றாம் ராஜராஜன் காலம் வரையிலும் நிறைய மலையமான்களின் பெயர்கள் கிடைக்கிறது. அதன்பின் காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் மலையகுல கோவலராயன் என்பவனின் தகவல் கிடைக்கிறது.இறுதியாக திருவண்ணாமலையில், "கூத்தாடுவானான சேதிராயன்" எனும் அதிகாரி 48 பசுக்களையும் இரண்டு எருதுகளையும் வழங்கியுள்ளான். இதுவே கல்வெட்டு ரீதியாய் மலைய்மான்களின் கடைசி கல்வெட்டாகும். அதன்பின்னர் எழுந்த விஜயநகர பேரரசில் புகழ்பெற்ற இவ்வேளிர் வம்சம் மக்களோடு மக்களாய் கலந்துவிட்டது.

நடுகல் புகைப்பட உதவி: குமரவேல் ராமசாமி

Reference :
1.மலையமான்கள்
2.நடுகல் கல்வெட்டுகள்
3.தென்னிந்திய கல்வெட்டுகள்

மலையமான் கொற்றவை 

மெய் பொருள் நாயன்மார் 

மலைய மான் காசுகள் 

              
மயிந்தபருமர் நடுகல் 
ஸ்ரீ முக்குல மலைய மான் சாத்தன் 
கபிலர் குன்று (கபிலர் உயிர் நீத்த இடம் ) 

திரு கோவிலூர்
வானகோமுத்தரசர்



   கிளியூர் மலைய மான் கல்வெட்டு

Wednesday, 29 July 2020

இலக்கியத்தில் அதியமான்கள்

தமிழக சிற்றரசுகள்:

மூவேந்தர்கள் தவிர்த்து பதிணெண் வேளிர்களும் சிறிது சிறிதாய் அந்தந்த பகுதிகளில் ஆளுமை செலுத்தியுள்ளனர். மூவேந்தர்களுக்கு முந்தைய குடித்தலைவர்கள் அவர்களே. சங்க இலக்கியத்தில் இவர்களை குறித்து பாடல்கள் அதிகம் பாடப்பட்டுள்ளது. மூவேந்தர்களின் ஆளுமைக்குபிறகு, அவர்களின் தலைமையையேற்று தங்களின் இருப்பை நீட்டித்துள்ளனர். அவர்களின் வரலாற்றினை முழுமையாய் காண்போம். முதலில் தகடூரை ஆண்ட அதியர் மரபினரை குறித்து காண்போம்.

இலக்கியத்தில் அதியமான்கள் :

அதிகர்,அதியன், அதிகன், அதியமான், அதியர்கோமான், அதிகமான், நெடுமான்அஞ்சி, அதியர்கோமான் அஞ்சி, நெடுமான், பல்வேல் அஞ்சி என பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர். புறநானூற்றில் அதியமான்கள் குறித்து( 87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,101,102,103,104,106,206,208,231,232,236,315,390) பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் அதிகம் பாடப்பெற்றது இம்மரபே! 

அதியமான் குறித்து பாடிய புலவர்கள்:
1.ஔவையார்
2.பரணர்
3.மாமூலனார்
4.பெருஞ்சித்திரணார்
5.காப்பியாற்று காப்பியனார்
6.அரிசில் கிழார்
7.நக்கீரர்
8.தாயங்கணார்
9.இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
10.அஞ்சியத்தை மகள் நாகையார்

காலத்தால் முந்தைய அதியமானாய் கருதப்படுவது பசும்பூன் பாண்டியனுக்காய் போரிட்டு அவனுக்காய் தன் உயிரை மாய்த்த அகநானூறு குறிப்பிடும் அதிகனையே முதல் அதியமானாய் அறிஞர் கருதுகின்றனர். இதற்கடுத்து கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை ஔவ்வைக்கு அளித்து அழியாபுகழ் பெற்ற அதியமான் ஆவார். அவரின் மகன் "பொகுட்டெழினி" மூன்றாமவர். அசோகரது கல்வெட்டிலேயே அதியமான்கள் குறித்து குறிப்பு வருகிறது எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைபெற்ற குடியினராய் அதியர் மரபை கொள்ளலாம். கி.மு.5 ம் நூற்றாண்டினை சேர்ந்தவராய் அதியர் மரபை சான்றுகளோடு ஏற்கலாம்.

அதியர் நடுகல்:

முதன்முதலாய் கரும்பினை அறிமுகம் செய்தவர்கள் அதியமான்கள். அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கீழே உள்ளவாறு பாடுகிறார்

நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ (புறம் 232)
என்றும்
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே

என்றும் பாடுகிறார்.

மேலும் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இவன் போரிட்டு நடைபெற்ற போரில் வேல்பாய்ந்து இறந்தான். இறந்தவன் உடல் தீயில் இடப்பட்டது இதனை,

எறிபுனக் குறவன் குறைய லன்ன
கரிபுற விறகின் ஈம ஓள்ளழற்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே (புறம் 235)

என்று குறிப்பிடுகிறார்.

இன்றைய தர்மபுரி பகுதியே அன்றைய தகடூர் நாடு. புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்! எங்கு ஒளிந்துள்ளதோ? இக்காலகட்டத்தைச் சேர்ந்த புலிமான்கோம்பை நடுகற்கள் கிடைத்துள்ளது! நிச்சயம் இந்நடுகல்லும் ஓர்நாள் வெளிவரும். அக்கால வழக்கப்படி அதியருக்கு நிச்சயம் பெரிதாக உயர்பதுக்கை ஏற்ப்படுத்தி வழிபாட்டில் வைத்திருப்பர். இன்று எங்கு வணங்கப்படுகிறதோ அதியர் கோமானின் நடுகல்?

கல்வெட்டில் அதியமான்கள்:

அசோகர் கல்வெட்டில் அதியமான்கள்:
அசோகர் கிர்நார் கல்வெட்டு


ஐம்பை (கி. பி - 1) ஸதியபதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்தபளி

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராய் கருதப்படும் அசோகர் தனது, சபாஸ், கால்சி, கிர்னார், ஜௌகதா ஆகிய் இடங்களில் வெட்டிய கல்வெட்டுகளில் தனது எல்லைக்கு அப்பாற்பட்ட அரசுகளாய், சோடா(சோழ), பாண்டிய, சதியபுதோ, கேதலபுதோ(சேரர்) என தென்புலத்து அரசமரபுகளை கூறுகிறார். இதில் வரும் சத்தியபுத்திரர்(சதியபுதோ) யார் என நீண்டகாலமாய் விவாதத்திற்குள் இருந்தது. கோசர்,என்றும் கொச்சிக்கு மேல்உள்ள நிலப்பரப்பு என்றும் சத்தியவரதஷேத்ரம்(காஞ்சிபுரம்) என்ற கருத்தும் இருந்தது. அதன்பின் ஜம்பையில் கண்டறியப்பட்ட "ஸதியபுதொ அதியமான் நெடுமான் அஞ்சி" எனும் கல்வெட்டு மேற்கண்ட ஐயங்களை நீக்கி, சத்தியபுத்திரர் அதியமான்களே என்று உறுதிபட சான்றளித்தது.
திருக்கோவிலூரில் நடந்த போர் ஒன்றில், தன் நண்பனான ஓரியை கொன்ற மலையமான் திருமுடிக்காரியை அதியமான் வென்றதாய் சங்க பாடல் கூறுகிறது. அப்போரில் அவன் வென்றதால் மலையமான் ஆண்ட திருக்கோவிலூரும் அவன் வசமாகியது. எனவே திருக்கோவிலூர் மாவட்டமான ஜம்பையில் அதியரது கல்வெட்டு வெட்டப்பட்டது. 


கி.பி.5 முதல் 8 வரை:
அதன்பின் தமிழக அரசியலில் ஏற்ப்பட்ட மாற்றம் காரணமாய் அதியர்களது குறிப்புகள் சுமார் 300 ஆண்டுகள் வரலாற்றில் கிடைக்கவில்லை. அதன்பின் பல்லவன் சிம்மவிஷ்ணு கால தர்மபுரி நடுகல் ஒன்றில்

"புறமலைநாட்டு மொக்கப்பாடியான்
தொறு கொள காப்புறை ஆளும்
மைந்தன் குமாரச்சதியாரு
பட்டார் கல்"


என வருகிறது. இதில்வரும் குமாரச்சதியாரை, அதியர் என அறிஞர் கருதுகின்றனர். அதன்பின் தர்மபுரி மகேந்திரவர்மனின் நடுகல் கல்வெட்டு ஒன்று, (கி.பி.604)

"கடிகாவில் அஞ்சினாரு மக்கள்"
என பயின்று வருகிறது. இதில் வரும் "அஞ்சினாரு" என்பதனை அதியமானான் மரபில் வந்த ஓர் வீரனாக கருதப்படுகிறது! 
சேலம் மாவட்டம் ஒட்டபாடியில் கிடைத்த கங்கமன்னன் ஸ்ரீபுருஷனின் நடுகல் கல்வெட்டில்(கி.பி 782) 
"தெழினியாரின் சேவகன் எருமைய நக்கனார் எருவாயிலை எறிந்து பட்டான்" என வருகிறது. இதில் வரும் "தெழினியார்" என்பது எழினியின் வழியினராய் கருதப்படுகிறது! 


அதே காலகட்டத்தில் அதியமான்களால், "அதியேந்திர விஷ்ணு க்ருஹம்" எனும் குடைவரைக்கோவில் அதியர்களால் நாமக்கல்லில் கட்டப்படுகிறது. இக்குடைவரை வளாகத்தில் பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழி பாடல் கல்வெட்டுகளும்,ஒன்பது விருதுப்பெயர்களும் காணப்படுகிறது! 
இக்கல்வெட்டு வாயிலாய் இக்குடைவரையின் பெயர் "அதியேந்த்ர விஷ்ணு க்ருஹம்" என்பதும், இதனை உருவாக்கியவர் அதியர் மரபைச் சேர்ந்த "குணசீலர்" என்பதும் தெரிய முடிகிறது, 

விருதுப் பெயர்கள்:

1.உத்பலகர்ணிகன்
2.நரவாகனன்
3.நரதேவன்
4.மதனவிலாசன்
5.பிரகிருதிபிரியன்
6.உதாரசித்தன்
7.மானசாரன்
8.நயபரன்
9.விமலசரிதன்








பிற்காலத்திய வடமொழி தாக்கம் காரணமாய் இவ்விருதுபெயர்களை வடமொழியில் "அதியன் குணசீலன்" ஏற்றிருப்பதை அறியலாம். இதில் அதியமான் சந்திரகுலத்தைச் சேர்ந்தஅதிராஜன் ஒருவரின் மகள்வயிற்றுப் பேரன் என தன்னை அழைத்துக்கொள்கிறான். இக்குடைவரை கி.பி 8 ம் நூற்றாண்டாய் கணிக்கப்பட்டுள்ளது. சீவரமங்கல செப்பேட்டில் முதலாம் வரகுணன் அதியமானை வென்று மதுரைச் சிறையில் அதிகமானை சிறையில் அடைத்ததாய் கூறுகிறான்.இதன் பின் அதியர் மரபு சோழர்களின் பெருவளர்ச்சி காரணமாய் அப்பெரும் பேரரசில் கலந்தது. ஆயினும் ஆங்காங்கே சில அதியர்கள் தம் இருப்பை கல்வெட்டில் வெட்டியுள்ளனர். சோழப்பெருவேந்தன் காலத்தில் கங்கநாடு சோழரின் கீழ் வருகையில், குவளாபுரம்(கோலார்) பகுதியையும், அருகேயுள்ள தகடூர் பகுதியையும் இணைத்து "நிகரிழி சோழமண்டலம்" என ஒரே வளநாடாக்கினார். அதன்பின் முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே ஒரு அதியமான் தென்படுகிறார். ராஜராஜன் காலசோழப்பேரசில் பல வேளிர் மரபினர் தனியே ஆதிக்கம் செலுத்தாது, தானைத்தலைவர், தளபதி நிலையிலேயே காணப்படுகின்றனர். ஒட்டக்கூத்தரின் விக்ரமசோழன் உலாவில், கூறப்பட்ட கலிங்கத்துப்பரணியில், கலிங்கப்போரில் அதியமான் ஒருவன் கலந்துகொண்டதை பற்றி கூறுகிறது.

"ஒட்டிய மானஅரசர் இரிய வடகலிங்கத்
தானை துணித்த அதிகனும்"

என்ற வரிகளில் இதனை காணலாம். மேலும் குலோத்துங்கனின் ஸ்ரீரங்கம் கல்வெட்டில், "பொன்பற்றிஉடையானான அரையன் சேனன் ஆன இராஜேந்திரசோழ அதியமான்" இதில் வரும் பொன்பற்றி எனும் ஊர் திருவீழிமிழலையாகும். தகடூரை பூர்விகமாய் கொண்ட அதியரில் ஒருபிரிவினர் மெல்ல இடம்பெயர்ந்து சோழமண்டலத்தில் வந்ததை இதன்மூலம் அறியலாம். இராஜராஜ அதியமான், எனும் ஒருவர் 12 ம் நூற்றாண்டில் வருகிறார்.

விடுகாதழகிய பெருமாள்:


"ராஜராஜ அதிகமான்", "பிறந்த பெருமாள்", "ஆண்டார் அதிகமானார்" என கல்வெட்டில் மரியாதையாய் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இடம்பெறுகிறார். மேலும் அதிகேசன், அதிகேந்திரன், தகடையர்காவலன், தகடையர்மன்னன் என வெகுவாய் புகழப்பட்டு தனியாய் கல்வெட்டு வெட்டும் வண்ணம் ஆளுமையில் இருந்தவரே "விடுகாதழகிய பெருமாள்" இவர் திருமலை கல்வெட்டில்,

"சேரவம்சத்து அதிகைமான் எழினி"
"வஞ்சியர் குலபதி எழினி" என சேரர்குடியின் கிளையாய் அதிகமானை கூறுகிறார். இவரது சித்தூர் கல்வெட்டில், "சேரவம்சத்து அரசர் விடுகாதழகிய பெருமாள்" என குறிப்பிட்டு அங்கே விற்சின்னத்தினையும் பொறித்துள்ளார்.
இவர் தன்னை பாலி, பொன்னி, பெண்ணை ஆற்றுக்கு தலைவன் என கூறிக்கொள்கிறார். எனவே இம்மூன்று ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதியை இவர் ஆண்டிருக்க வேண்டும். தனக்கு பகைவராய் காடவர், கங்கர், மகதர், ஆகியோரைச் சுட்டுகிறார். இவர் பெயரில் "விடுகாதழீச்வரம்" எனும் கோவில் வாணியம்பாடியில் உள்ளது. சோழர் வலுகுன்றிய காலத்தில் சாமந்தர்களாய் விளங்கிய குறுநில அரசர்களான சம்புவரையர், அதியமான், வானகோவரையர் முதலியோர் கூட்டணி அமைக்க, இத்தகவலை அறிந்த சோழனின் உறவினரான ஹொய்சாளர்கள் தர்மபுரியில் அதிகமானை தாக்கி கொன்றனர். அதன்பின் அதிகமானின் வம்சம் மன்னராகும் தகுதி தடுக்கப்பட்டது.

1278,79 ல் வல்லம் சோழீஸ்வரர் கோவிலில் அதிகாரி ஒருவரின் பெயர் அதிகமான் என வருகிறது! இறுதியாக "திருவாசல் முதலி" எனும் குறுகிய பதவியில் குலசேர பாண்டியனின் கல்வெட்டில் ஒருவர் வருகிறார். அதன்பின் இவர்களைப்பற்றிய குறிப்புகள் வரலாற்றில் முடிந்தது.

இன்றும் தர்மபுரி பகுதியிலும், மதுரை, காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகமான்கள் எனும் பட்டப்பெயர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அதியமான் பெருவழி :

அதியமான் பெருவழி நாவற் தாவளத்திற்குக் காதம்-29
என்று எழுதப்பட்டுள்ளது. காதம்-29 என்ற எண்னுக்கு அருகில் இரண்டு பெரிய துவாரமும் ஓன்பது சிறிய துவாரமும் குழிகளாக செதுக்கப்பட்டுள்ளன.
பெரிய துவாரமும் ஒவ்வோன்றும் பத்துகாதமாகும் மீதி ஓன்பது சிறிய துவாரமும்
ஒவ்வோன்றும் ஓரு பத்துகாதமாகும் . நாவற் தாவளம் என்ற ஊர் எங்கு இருந்தது
என்பது இதுவரை கண்டுபிடிக்க வில்லை.இதன் காலம் 13 ஆம் நூறாண்டாக இருக்கும் கருதப்படுகிறது.இது இராசராச அதியமானின் காலத்தை சார்ந்தாக இருக்கவேண்டும்.


Reference :
1.பல்லவர், பாண்டியர், அதியர் குடைவரைகள்.
2.South indian inscriptions
3.நடுகல் கல்வெட்டுகள்
4.தமிழகத்தில் அதியர் மரபு
5.கல்வெட்டும் வாழ்வியலும்